Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆள் - திரை விமர்சனம்

ஆள் - திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

, ஞாயிறு, 21 செப்டம்பர் 2014 (23:53 IST)
சாதாரணக் குடிமகனாகவும் குடும்பஸ்தனாகவும் இருக்கும் இஸ்லாமிய இளைஞன், எப்படி இஸ்லாமிய தீவிரவாதிகளால் வலுக் கட்டாயமாகப் பகடைக் காயாகப் பயன்படுத்தப்படுகிறான் என்பதைத் துணிச்சலுடன் காட்டும் படம்.

 
சிக்கிம் பொறியியல் கல்லுரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் அமீர் (விதார்த்). மிகவும் பாசமான, இறை நம்பிக்கையுள்ள, அமைதியான குணம் உடையவர். அவரின் அம்மா, தம்பி, தங்கை, காதலி (ஹார்த்திகா ஷெட்டி) ஆகியோர் சென்னையில் இருக்கிறார்கள். இந்நிலையில், அந்தக் கல்லுரியில் படிக்கும் இஸ்லாமிய மாணவரைச் சக மாணவர்கள் தாக்குகிறார்கள். அவர்களிடமிருந்து அவனை அமீர் காப்பாற்றுகிறார். தன் வீட்டிலேயே அவன் தங்குவதற்கும் அனுமதிக்கிறார். தன்னைத் தாக்கியவர்களைப் பழி வாங்க ஒரே வழி, ஜிகாத் என அந்த மாணவன் கூறுகிறான். 
 
இந்நிலையில், தன் காதல் விவகாரம், காதலியின் அப்பாவுக்குத் தெரிய வருகிறது. காதலி அனுப்பிய கோட் உடையுடன் அமீர், சென்னைக்கு வருகின்றார். விமான நிலையத்தில் வந்து இறங்கியதுமே மர்மமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அவரின் உடைமைகள், ஒரு டாக்சிக்குள் இருக்கின்றன. இரு சக்கர வாகனத்தில் வரும் இருவர், அவர் கையில் ஒரு செல்பேசியைத் திணித்துச் செல்கிறார்கள். அதில் அழைப்பு வருகிறது. நடந்து வரும் ஒருவர், அதை எடுத்துப் பேசு என்கிறார். 
 
எதிர் முனையில் பேசுபவர் (விடியல் ராஜூ), அமீருக்குக் கட்டளைகள் இடுகிறார். உன் குடும்பத்தினர் எங்கள் வசம் இருக்கிறார்கள். அவர்களை உயிரோடு பார்க்க வேண்டும் என்றால், நான் சொல்வதைச் செய் என்கிறார். அடுத்தடுத்து அவரை வெவ்வேறு இடங்களுக்குச் சென்று காகிதத்தை வாங்கு, காகிதத்தில் உள்ள எண்ணுக்குத் தொலைபேசியில் பேசு, தொலைபேசியில் சொல்வதை வேறு ஓர் இடத்துக்குச் சென்று இன்னொருவரிடம் சொல், அவர் கொடுப்பதை இங்கே வாங்கிக்கொண்டு வா... என ஏகப்பட்ட கட்டளைகள். குடும்பத்தினரைக் காப்பாற்ற, வேறு வழியின்றி அமீர், அவர் சொன்னபடி எல்லாம் செய்கிறார். இறுதியில் அமீரிடம் ஒரு வெடிகுண்டுப் பெட்டியைக் கொடுத்து, அதை ஒரு நெரிசலான பேருந்தில் வைக்கச் சொல்கிறார். அமீர் அவர் சொன்னபடி வெடிகுண்டு வைத்தாரா? தன் குடும்பத்தினரைக் காப்பாற்றினாரா? என்பதுதான் மீதிக் கதை.

webdunia
 
இந்த மாதிரி ஒரு கதைக் களத்தை எடுத்ததற்காக இயக்குநர் ஆனந் கிருஷ்ணாவை முதலில் பாராட்டலாம். இதுவரையிலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் அனைவரும் ஜிகாத் என்ற பெயரில், தங்கள் மதக் கடமையாக, விரும்பியே இத்தகைய வன்முறைகளில் ஈடுபடுவதாகக் காட்டப்பட்ட நிலையில், இந்தப் படத்தில் இந்தச் செயல்கள் திணிக்கப்படுகின்றன என்று காட்டியுள்ளார். ஆனால், இதை எடுத்துள்ள முறையில் பல கேள்விகள் நமக்கு எழுகின்றன.
 
மேலும்

இஸ்லாமியத் தீவிரவாதிகள், இஸ்லாமியர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டு, இஸ்லாமியர் ஒருவரை இவ்வாறு ஆட்டுவிப்பது ஏன்? இதுதான் அவர்களின் திட்டம் என்றால், எந்த மதத்தினரும் இதைச் செய்வார்கள் தானே?
 
விதார்த், பாத்திரத்துக்கு ஏற்ப, அளவாக நடித்துள்ளார். காதல், கோபம், மகிழ்ச்சி, சோகம், சோர்வு எனப் பல உணர்வுகளையும் தேவையான அளவுக்கு வெளிப்படுத்தியுள்ளார். படம் முழுவதும் ஒரே உடையில் (கோட்) வந்தாலும் அதை இயக்குநர் நியாயப்படுத்தி இருக்கிறார். இறுதிக் காட்சியில் அவர் எடுக்கும் முடிவு, உருக்கமானது. ஆனால், உங்களுக்கு ஜிகாத் பிடிக்குமா என இஸ்லாமிய மாணவர் கேட்கும்போது, அவர் உடனே பதில் சொல்லாதது ஏன்? ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர், தன்னைச் சாதாரண ஆள் என்று கூறிக்கொள்வது ஏன்? 
webdunia
 
கராச்சியில் ஒரு எண்ணுக்கு அமீர் பேசியதும் அருகில் நிற்கும் காவல் துறையைச் சேர்ந்தவர், அமீரை விரட்டுகிறார். சந்தேகம் இருந்தால் அமீரைப் படம் எடுத்து, எல்லாக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பியிருக்கலாம். அல்லது, அந்தத் தொலைபேசி எண் மூலம் யாருடன் பேசினார் என்பதையும் ஒலிப்பதிவு செய்வதன் மூலம் என்ன பேசினார் என்பதையும் கண்டறிந்திருக்கலாம். ஆனால், போலீஸ்காரர், அமீரைக் கால்நடையாகப் பின்தொடர்ந்து ஓடுகிறார். தீவிரவாதிகள் தொழில்நுட்ப ஆற்றலுடன் இருப்பதாகக் காட்டும் படத்தில் காவல் துறையைக் கையாலாகாத துறையாகக் காட்டிருக்கிறார்கள்.
 
கதாநாயகி ஹார்த்திகா ஷெட்டி, குறைவான காட்சிகளிலேயே வருகிறார். ஆயினும் இந்துவான அவர், இஸ்லாமியரான அமீரைக் காதலிப்பது, படத்தின் நல்ல அம்சங்களில் ஒன்று. 
 
என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவு, படத்துக்குப் பெரிய அளவில் விறுவிறுப்பு ஏற்றியிருக்கிறது. ஆனால், அவர் அதிகப்படியாக அண்மைக் (குளோசப்) காட்சிகளை வைத்துள்ளார். அதுவும் அழகியல் குறைவான இடங்களில். இது, சில நேரங்களில் சலிப்பையும் எரிச்சலையும் தருகின்றது. ஜோஹனின் பின்னணி இசை, சிறப்பு. பல காட்சிகளை இசையும் ஒளிப்பதிவும் தான் தூக்கி நிறுத்துகின்றன.
 
இயக்குநர் ஆனந் கிருஷ்ணா, மர்மக் கதை போன்று எடுக்க முயன்றுள்ளார். ஆனால், அடுத்து என்ன என்ற ஆர்வத் துடிப்பு எழவில்லை. அமீரை அங்கும் இங்கும் அலைய வைப்பதும் இத்தனை ஆட்களை அவர் பின்னே கண்காணிக்க வைத்துள்ளதும் பின்னாலேயே ஏதோ வீடியோவில் பார்ப்பது போல் அவரைப் பின்தொடர்வதும் ஏன் என்று தெரியவில்லை. உங்கள் எல்லோரின் முகமும் எனக்குத் தெரியும். ஆனால், என் முகம் யாருக்கும் தெரியாது என்ற வாசகம், படத்தின் சுவராெட்டிகளில் இடம் பெற்றுள்ளது. ஆனால், கடைசி வரை, எந்த வகையில் அவரை இவர் நேரடியாகக் கண்காணிக்கிறார் என்று காட்டவில்லை.  
 
இவ்வளவு ஆட்களை வைத்துள்ளவர், அவர்களுள் ஒருவரையே குண்டு வைக்க அனுப்பியிருக்கலாமே, இந்தப் பணிக்கு  அமீரைத் தேர்ந்தெடுத்த காரணமும் குண்டு வைக்க அவர் கூறும் காரணமும் அவ்வளவு வலுவாக இல்லை.
 
படத்தில் அமீரைத் தவிர, இதர பெரும்பாலான இஸ்லாமியர்கள், தீவிரவாதத்துக்கு உடந்தையாக இருக்கிறார்கள். இது,  இஸ்லாமியர் என்றாலே அப்படித்தான் என்ற கண்ணோட்டத்தை ஆமோதிப்பதாக உள்ளது. இந்தப் பின்னணியில் இந்தப் படத்துக்கு இஸ்லாமிய நாடுகள் சிலவற்றில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அல்கொய்தாவின் கிளையை உருவாக்கப் போவதாக வந்த செய்தியும் அதற்கு நரேந்திர மோடியின் பதிலும் நினைவுக்கு வருகின்றன. 
 
அமைதியை விரும்பும் இஸ்லாமியர் மீது தீவிரவாதத்தைத் திணிப்பதையும் உலகெங்கிலும் இருந்து தீவிரவாதிகளுக்கு நன்கொடை கிடைப்பதும் இந்தியாவில் வெடிகுண்டுச் சம்பவங்களுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதும் அவர்களுக்குப் பெரிய அளவில் வலைப்பின்னல் இருப்பதும் படத்தின் வாயிலாகத் தெரிய வருகின்றன. ஆனால், நல்ல முஸ்லிம்கள் சிலரையும் படத்தில் காட்டியிருந்தால், படத்தின் நம்பகத்தன்மை கூடியிருக்கும். எனினும் துணிச்சலாகப் பூனைக்கு மணி கட்டியிருக்கிறார் இயக்குநர். 
 
பல்வேறு மதத்தினர் வாழும் இந்தியாவில் ஒரு மதத்தினர் மீது சந்தேகமும் அவநம்பிக்கையும் எழுவதை விட, சகோதரத்துவமும் நல்லிணக்கமும் வளர்வதே முக்கியம். அதற்கு ஏற்ப, திரைக்கதையை வடிவமைப்பதே இயக்குநருக்கும் படக் குழுவினருக்கும் பெருமை சேர்க்கும்.
 

Share this Story:

Follow Webdunia tamil