டீம்வொர்க் புரொடக்சன் ஹவுஸ் சார்பில் அமீர் தயாரித்து நடித்திருக்கும் படம், யோகி. அமீர் அரிதாரம் பூசும் முதல் படம்.
திருடா திருடி, பொறி படங்களை இயக்கிய சுப்பிரமணிய சிவா யோகியை இயக்கியிருக்கிறார். யோகி என்கிற யோகேஸ்வரனின் சேரி வாழ்க்கையில் இடர்படும் சம்பவங்களே கதை. இந்த வேடத்தில் அமீர் நடித்திருக்கிறார். அவருடைய நண்பர்களில் ஒருவர் சினேகன். ராஜசுலோட்சனா என்ற கதாபாத்திரத்தில் மதுமிதா நடித்திருக்கிறார். இவர் படத்தில் அமீரின் காதலியாக வருகிறார். பத்திரிகையாளர் தேவராஜ் பிச்சைக்காரராக முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார்.சேரியை மையமாகக் கொண்ட படம் என்பதால் சேரியில் தங்கியிருந்து அங்குள்ளவர்களின் வாழ்க்கை முறை, நடை, உடை, பாவனைகளை கற்றுக் கொண்டு அதற்கேற்ப நடித்திருக்கிறார் மதுமிதா. சொந்தக்குரலில் அவர் டப்பிங் பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.யுவன் ஷங்கர் ராஜா இசையில் சினேகன் பாடல்கள் எழுதியுள்ளார். அமீரும், சினேகனும் சொந்தக் குரலில் பாடியுள்ளது முக்கியமானது. பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், நாடோடிகள் படங்களுக்கு சண்டைப் பயிற்சி அமைத்த ராஜசேகர் இந்தப் படத்துக்கும் சண்டைப் பயிற்சி அமைத்துள்ளார். இரண்டு சண்டைகளை மட்டும் 50 நாட்களுக்கும் மேலாக படமாக்கியிருக்கிறார்கள்.ரணகள சண்டைகளுக்காக சென்சார் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.