சலோம் ஸ்டுடியோ தயாரிப்பில் பிரபுசாலமன் இயக்கியிருக்கும் படம் மைனா. கிங், கொக்கி, லீ, லாடம் படங்களுக்குப் பிறகு இவர் இயக்கியிருக்கும் படம் இது.
மைனா என்ற மலைசாதி பெண்ணுக்கும், சுருளி என்ற டிரைவருக்கும் ஏற்படும் காதலும், காதலுக்காக எதையும் செய்யும் அவர்களின் துணிச்சலும்தான் படத்தின் மையம். தேனிப் பகுதியைச் சேர்ந்த கதை என்பதாலும் கதையின் பெரும்பகுதி காட்டில் நடப்பதாலும் அடர்ந்த காட்டுப் பகுதியில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
சுருளியாக கூத்துப்பட்டறை விதார்த்தும், மைனாவாக அனகாவும் நடித்துள்ளனர். படத்தில் வரும் ஏறக்குறைய அனைத்து கதாபாத்திரங்களிலும் புதுமுகங்களே நடித்துள்ளனர்.
மைனாவின் சிறப்புகளில் ஒன்று, முழுப் படத்தையும் இயற்கை ஒளியிலேயே படமாக்கியுள்ளனர். ஒளிப்பதிவு செய்திருப்பவர் சுகுமார்.
படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். அனைத்துப் பாடல்களையும் யுகபாரதியே எழுதியுள்ளார். இசை டி.இமான். இந்தப் படத்துக்குப் பிறகு இமானின் இசை அனைவராலும் பேசப்படும் என கமல், பாலா இருவருமே வாழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸும், ஏஜிஎஸ் எண்டர்டேயின்மெண்டும் வெளியிடுகிறது.