சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பில் பிரபு தயாரித்திருக்கும் படம். காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் படங்களுக்குப் பிறகு நான்காவதாக அஜித், சரண், பரத்வாஜ் இணைந்து பணியாற்றியிருக்கும் படம்.
அஜித்துக்கு இதில் அப்பா, மகனாக இரு வேடங்கள். இதுவொரு பழிவாங்கும் கதை. இதுவரை யாரும் சொல்லாத விதத்தில் படமாக்கியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர் சரண். படத்தின் பெரும் பகுதி வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. பெரிய தாடி மீசையுடன் இதுவரையில்லாத கெட்டப்பில் நடித்திருக்கிறார் அஜித்.அஜித்தின் அப்பா கேரக்டரை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள். யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இருக்கும் என்கிறார் சரண். அஜித்துக்கு சமீரா ரெட்டி, பாவனா என்று இரண்டு ஜோடிகள். பாடல் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்கியுள்ளனர். அஜித்தின் ஓபனிங் சாங்கை 100 பேர் பாடியிருக்கிறார்கள். அஜித், சரண், யூகிசேது இணைந்து கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளனர். படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார் அஜித். பாடல்களை வழக்கம்போல வைரமுத்து எழுதியுள்ளார். படத்தில் வரும் ஆக்சன் காட்சிகளுக்காக மிகவும் ரிஸ்க் எடுத்திருக்கிறார் அஜித். படத்தின் ஹைலைட்டாக ஆக்சன் காட்சிகள் இருக்கும் என்பது அசல் யூனிட்டின் கணிப்பு. சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கும் இப்படம் வரும் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது.