மறக்க முடியுமா - பென் ஹர்

திங்கள், 31 அக்டோபர் 2016 (15:13 IST)
1959 -இல் வில்லியம் வைலர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம், பென் ஹர். பைபிள் கதைப் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை ரோமப்பேரரசின் பின்னணியில் பிறகு வெளிவந்த கிளாடியேட்டர் படங்களின் முன்னோடி என்று சொல்லலாம்.

 
இயேசு பிறந்து வளர்ந்த காலகட்டத்தில் ஜெருசலேமில் வசித்துவந்த செல்வந்தர், பென் ஹர். அவர் யூதர். ரோம ஆதிக்கத்திலிருந்து ஜெருசலேமை விடுவிக்க வேண்டும் என்பது அவரது லட்சியம். ஜெருசலேமின் கமாண்டராக இருக்கும் பென் ஹரின் நண்பனான மெஸ்ஸலா என்பவனே அந்த கனவுக்கு எதிராக இருக்கிறான். அவன் ரோமன். ரோமப்பேரரசுதான் அனைத்தையும் ஆள வேண்டும் என்று நினைப்பவன்.
 
இந்தப் பகை காரணமாக தனது செல்வாக்கை பயன்படுத்தி மெஸ்ஸலா பென் ஹரின் அம்மாவையும், தங்கையையும் சிறையில் அடைக்கிறான். பென் ஹரை கப்பலில் அடிமை வேலைக்கு அனுப்பப்படுகிறான். பென் ஹரால் தனது பழைய வாழ்க்கையை திரும்பப் பெற முடிந்ததா? அவனது அம்மாவும், தங்கையும் என்ன ஆனார்கள் என்பதை பென் ஹர் திரைப்படம் சொல்கிறது.
 
இயேசுவின் வாழ்க்கை வரலாறைச் சொல்லும் ஏராளமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. பென் ஹர் திரைப்படத்தில் இயேசுவின் வாழ்க்கைக்கு இணையாக பென் ஹரின் வாழ்க்கை சொல்லப்படுகிறது. இதனால் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களையும் படத்தின்பால் வில்லியம் வைலரால் ஈர்க்க முடிந்தது. சுனாமி அடித்த உண்மைச் சம்பவத்தை கமல் தசாவதாரக் கதையில் இணைத்தது போல் இயேசுவின் வாழ்க்கை சரிதத்தில் பென் ஹரின் கதை இணைக்கப்பட்டுள்ளது. 
 
அந்தநாள்வரை உலகில் தயாரிக்கப்பட்ட படங்களில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் பென் ஹர். அதேபோல் உலகம் முழுவதும் நல்ல வசூலையும் பெற்றது. ஆஸ்கர் விருதுப் போட்டியில் சிறந்த இயக்குனர், சிறந்த படம் உள்பட 11 ஆஸ்கர் விருதுகளை இந்தப் படம் வென்றது. 
 
2016 -இல் பென் ஹர் திரைப்படத்தை ரீமேக் செய்தனர். 1959 -இல் வில்லியம் வைலர் இயக்கிய பென் ஹரின் அருகில்கூட அது வரவில்லை என்பது முக்கியமானது.
 
வில்லியம் வைலரின் பென் ஹர் மறக்க முடியாத ஒரு காவியம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இரண்டு தினங்களில் 26 கோடியை தாண்டிய காஷ்மோரா