மறக்க முடியுமா - ஹேராம் சில நினைவுகள்
மறக்க முடியுமா - ஹேராம் சில நினைவுகள்
ஹேராம் படம் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்ததை கமல் ரசிகர்கள் கொண்டாடினர். கமல் இயக்கிய படங்களில் ஹேராமே முதன்மையானது.
ஹேராம் படம் வெளியாவதற்கு முன், காந்தியை படம் விமர்சிப்பதாகக்கூறி, காங்கிரஸார் இந்தப் படத்தை எதிர்த்தனர். வடஇந்தியாவின் பல இடங்களில் ஹேராம் வெளியான திரையரங்குகளின் முன்பு காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். சில தினங்களில் காட்சி மாறியது. காங்கிரஸார் மௌனமாக இந்துத்துவா அடிப்படை சக்திகள் படத்தை எதிர்த்தனர். ஹிட்லரின் நாஜிப்படைகளுக்கு இணையாக இந்துத்துவா அடிப்படை சக்திகளை - குறிப்பாக ஆர்எஸ்.எஸ். இயக்கத்தை கமல் படத்தில் காட்டியிருந்தார்.
ஹேராமின் ஒவ்வொரு காட்சியையும் தனித்தனியாக எடுத்து விளக்கலாம். தனி புத்தகமாகவே போடலாம். அந்தளவு விஷயங்கள் நிறைந்த படம் அது. சுதந்திரத்துக்குப் பின் மன்னர்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது. ரயில்வே கிராஸிங்கில் பழைய மன்னரும், அபயங்கரும், கமலும் இருக்கையில் காரில் , ரயில்வே கேட் மன்னருக்காக திறக்கப்படாதா? என்று ஒருவர் கேட்க, இப்போது எந்த கேட்டும் மன்னருக்காக திறக்கப்படுவதில்லை என்பார் மன்னர். அவர்தான் காந்தியை கொலை செய்ய மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவர். இதேபோல் சதாத்திரம் ஒவ்வொரு காட்சியிலும் தூவப்பட்டிருக்கும்.
ஹேராமில் சிறப்பாக படைக்கப்பட்டது அதுல் குல்கர்னி நடித்த அபயங்கர் கதாபாத்திரம். அதில் முதலில் நடித்தவர் மோகன் கோகலே. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கையில் அவர் மாரடைப்பால் மரணமடைய அவரை வைத்து எடுத்தக் காட்சிகளை நீக்கிவிட்டு, அதுல் குல்கர்னியை நடிக்க வைத்தனர். அந்த கதாபாத்திரத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது.
ஹேராமுக்கு முதலில் இசையமைத்தவர் எல்.சுப்பிரமணியம். மிகப்பெரிய கலைஞர். ஆனால், சினிமா இசையில் அவ்வளவாக தோச்சி பெறாதவர். அவருக்கும் கமலுக்கும் ஒத்துப்போகாமல் போக, அவரை மாற்றிவிட்டு கமல் இளையராஜாவிடம் வந்தார். அதற்கு முன்பே பாடல்கள் எடுக்கப்பட்டிருந்தன. பின்னணி இசையுடன் பாடல்களையும் தானே இசையமைப்பேன் என்றார் இளையராஜா.
மேலும் அடுத்த பக்கம் பார்க்க...............
ஆனால், பாடல்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தன. அதனால், காட்சிகளை மாற்றாமல் நடிகர்களின் உதட்டசைவுக்கேற்ப புதிதாக பாடல்களை கம்போஸிங் செய்தார் இளையராஜா.
அப்படியே உல்டா. இதேபோல் உலக சரித்திரத்தில் எந்த இசையமைப்பாளரும் பாடல் கம்போஸிங் செய்திருக்க மாட்டார் என்பதுடன், ஹேராம் பாடல்கள் அவரது இசை வாழ்வின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக அமைந்தன.
ஹேராம் படத்தின் ஒலிப்பதிவு லைவாக ரெக்கார்ட் செய்யப்பட்டது. சரித்திரப் படமொன்றில் லைவாக ஒலியை ரெக்கார்ட் செய்வது மிகக்கடினம்.
படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். இன்றுவரை ஹேராம் அளவுக்கு நுட்பமான ஒளிப்பதிவு தமிழில் வரவில்லை. சரித்திரப் படம் என்பதால் நீலவண்ண வானம் எந்த பிரேமிலும் வராமல் பார்த்துக் கொண்டனர். இதேபோல் பல்வேறு நுட்பமான விஷயங்களை ஒளிப்பதிவு கொண்டிருந்தது.
அதேபோல், இந்தப் படத்தில் வரும் பெரும்பாலான கட்டிடங்கள் படத்துக்காக போடப்பட்ட அரங்குகள். தேசிய விருதுப் போட்டியின் நடுவர்கள் அதனை நிஜமான கட்டிடங்கள் என்று எண்ணியதால், கலை இயக்கத்துக்கான விருது ஹேராமுக்கு கிடைக்காமல் போனதாக ஹேராமின் கலை இயக்குனர் சாபு சிரில் குறிப்பிட்டுள்ளார்.
ஹேராமின் திரைக்கதை புவியரசின் எழுத்தில் வெளியானது. தமிழில் இதுவரை வெளிவந்ததில் மிகச்சிறந்த திரைக்கதை புத்தகம் ஹேராம். படத்தில் நாம் தவறவிட்ட விஷயங்களை இந்த புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று ஹேராம். திரைப்படம் எடுப்பவர்களுக்கும், அது குறித்து அறிய விரும்புகிறவர்களுக்கும் ஹேராம் அள்ள அள்ள குறையாக ஒரு பொக்கிஷம்.