அப்பாஸ் கியரோஸ்தமி - கலையின் பேராத்மா
அப்பாஸ் கியரோஸ்தமி - கலையின் பேராத்மா
ஈரான் சினிமாவை உலக அளவில் எடுத்துச் சென்ற மாபெரும் படைப்பாளிகளில் ஒருவரான அப்பாஸ் கியரோஸ்தமி கடந்த 04-07-16 அன்று இயற்கை எய்தினார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கலையார்வலர்களை துயரத்தில் ஆழ்த்தியது.
அப்பாஸ் கியரோஸ்தமியின் திரைப்படங்கள், திரைப்படம் என்ற கலையின் சாத்தியப்பாடுகள் மீது வெளிச்சம் பாய்ச்சுவை என்பதுடன், நமது வாழ்வை மேம்படுத்துவதற்கான செய்திகளை கொண்டிருப்பவை. தன்முனைப்பு முற்றிலும் அகற்றப்பட்ட கியரோஸ்தமியின் படங்களை ஒருவர் அணுகுவதும், அதன் உட்பொருள் புரிந்து ரசிப்பதும் எளிதல்ல. சினிமாவுக்கான அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானவை அவரது திரைப்படங்கள்.
உலக அளவில் கியரோஸ்தமிக்கு ஏராளம் ரசிகர்கள் உண்டு. மார்டின் ஸ்கார்சஸி, மறைந்த ஜப்பான் திரைப்படமேதை அகிரா குரோசவா, பிரான்சை சேர்ந்த கோதார்த் என்று பெரும் படைப்பாளிகளால் கொண்டாடப்பட்ட அப்பாஸ் கியரோஸ்தமி ஈரானில் அதிகம் அறியப்படாத இயக்குனராகவே இருந்தார். அவரது கடைசிகால திரைப்படங்கள் தவிர மற்ற அனைத்தும் ஈரானில் எடுக்கப்பட்டவை. ஈரான் மக்களின் வாழ்வை நேர்மையுடனும், மேன்மையுடனும் அணுகியவை.
கியரோஸ்தமி ஓவியர், புகைப்பட கலைஞர் என பன்முகங்கள் கொண்டவர். குறும்படங்கள், ஆவணப்படங்கள் இயக்கி முழுநீள திரைப்படத்துக்கு வந்தவர். உலகம் முழுவதும் அறியப்படும் ஆளுமையாக திகழ்ந்த போதும் குறும்படங்கள், ஆவணப்படங்கள் மீதான ஆர்வத்தில் அவற்றை தொடர்ந்து எடுத்தவர்.
திரைப்படம் என்பது கதை சொல்லும் மீடியா இல்லை என்பது கியரோஸ்தமியின் கருத்து. அதனால் அவரது திரைப்படங்களில் கதை இருக்காது. கதையாக திரளாத சம்பவங்களின் தொகுப்பாகவே அவரது படங்கள் இருக்கும். அவற்றுக்குள் ஆழமான வாழ்வியல், அரசியல் செய்திகள் பார்வையாளர்களுக்கு பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். அவற்றை பார்த்து அறிவது பார்வையாளர்களுக்கு முன்பிருக்கும் சவால்.
அவரது புகழ்பெற்ற, வேர் இஸ்த ப்ரெண்ட்ஸ் ஹோம் திரைப்படத்தை எடுத்துக் கொள்வோம். அதில் அஹமது என்ற சிறுவனின் பையில் அவனது சக மாணவனின் வீட்டுப்பாட புத்தகம் எப்படியோ மாட்டிக் கொள்கிறது. நாளை அவன் வீட்டுப்பாடம் எழுதாமல் வந்தால் ஆசிரியர் அவனை வகுப்புக்கு வெளியே நிறுத்திவிடுவார். எப்படியாவது நண்பனிடம் அந்த புத்தகத்தை தந்தாக வேண்டும். அஹமதுக்கு அவனது வீடு இருக்கும் பகுதி தெரியும், வீடு தெரியாது. நண்பனை தேடி அஹமது செல்வதுதான் வேர் இஸ் த ப்ரெண்ட் ஹோம்.
இறுதியில் நண்பனை சந்திக்காமலே வந்துவிடுகிறான் அஹமது. அவனே நண்பனுக்கும் சேர்த்து வீட்டுப்பாடம் எழுதுகிறான். மறுநாள் ஆசிரியரிடம் மாட்டிக் கொள்ளாமல் நண்பன் தப்பித்துக் கொள்கிறான். இந்த படத்தில் சிறுவர்கள் உலகம் எவ்வளவு தூய்மையானதாக, ஒரு விஷயத்தில் எவ்வளவு தீவிரமான ஈடுபாடு கொண்டதாக இருக்கிறது என்பதை கியரோஸ்தமி காட்டுகிறார்.
அவரது மகத்தான படைப்புகளில் ஒன்றான வின்ட் வில் கேரி அஸ் திரைப்படத்தில் மேலே உள்ளது போன்ற சம்பவம்கூட இல்லை. ஒரு இன்ஜினியரும் சிலரும் ஒரு கிராமத்துக்கு வருகிறார்கள். ஏன் வருகிறார்கள், எதற்கு வருகிறார்கள் என்பது முதற்கொண்டு எதற்கும் பதிலில்லை. படம் மரணத்துக்கான காத்திருப்பாக தொடங்கி வாழ்தலின் கொண்டாட்டத்தில் முடிகிறது.
கியரோஸ்தமியின் ஒவ்வொரு படங்களும் வாழ்வியலின் பிரமாண்ட துளிகள். கலைநேர்த்திமிக்கவை. தன்முனைப்பு முற்றிலுமாக களையப்பட்ட கியரோஸ்தமியின் படங்கள் அவர் எத்தனை உயர்ந்த பேராத்மா என்பதற்கு சான்றாக அமைந்துள்ளன.