இந்திய பங்குச் சந்தை கடந்த மூன்று நாட்களாக ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். ஆனால், இன்று திடீரென பங்குச்சந்தை சரிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் முழுவதும் இந்திய பங்குச்சந்தை மிக மோசமாக செயல்பட்டதால் கோடி கணக்கில் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில், இந்த வாரம் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் பங்குச்சந்தை உயர்வடைந்து முதலீட்டாளர்களுக்கு ஓரளவு நம்பிக்கை அளித்தது. ஆனால் இன்று, வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை, பங்குச்சந்தை திடீரென சரிந்தது.
சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 495 புள்ளிகள் குறைந்து 76,546 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 141 புள்ளிகள் குறைந்து 23,717 புள்ளிகளில் வர்த்தகம் செய்துள்ளது.
இன்றைய பங்குச்சந்தையில் சன் பார்மா, ஆசியன் பெயிண்ட், ஐடிசி, இந்துஸ்தான் லீவர், டாடா ஸ்டீல், டாடா மோட்டார், பிரிட்டானியா, ஹீரோ மோட்டார்ஸ், சிப்லா உள்ளிட்ட பங்குகள் உயர்வடைந்துள்ளது.
அதே நேரத்தில், டைட்டான், பாரதி ஏர்டெல், ஸ்டேட் வங்கி, டெக் மகேந்திரா, எச்டிஎப்சி வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, விப்ரோ, டிசிஎஸ், ஆக்ஸிஸ் வங்கி, இன்போசிஸ் ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.