பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்து வருபவர்கள் இன்று முதல் புதிய கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்று பி.எஸ்.இ அறிவித்துள்ளதால் பங்குச்சந்தையில் ஈடுபட்டு வருபவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை என்று கூறப்படும் பி.எஸ்.இ பங்குச்சந்தை ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது. இதன்படி இன்றுமுதல் பங்குச்சந்தையில் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகவும் இந்த கட்டணம் தொடர்ந்து நடைபெறும் பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கே பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், குறைந்தபட்சமாக ரூ.1 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், மாதந்தோறும் 5 லட்சம் பரிவர்த்தனைகளுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் ரூ.1 கட்டணம் என்றும், அதுவே, 5 முதல் 10 லட்சம் எண்ணிக்கையிலான பரிவர்த்தனை எனில், 70 காசுகளும், 10 முதல் 20 லட்சம் எண்ணிக்கை உடைய பரிவர்த்தனைகளுக்கு தலா 60 காசுகளும் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ரூ.1 கோடிக்கும் அதிகமான பணப்பரிவர்த்தனைகளுக்கு, ரூ.275 கட்டணமும் வசூலிக்கப்பட உள்ளதாக, பிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது