காலம் ரொம்பத்தான் மாறிவிட்டது... கலாச்சாரம், பாரம்பரியம், சடங்குகளில் மூழ்கிக் கிடந்த இந்தியாவின் தற்போதைய இளைய சமுதாயத்திடம், இவற்றை எல்லாம் தவிடுபொடியாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இது நல்ல முறையில் இருந்தால் வரவேற்கலாம். தவறில்லை.
அன்றெல்லாம் பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணையோ, ஆணையோ திருமணம் செய்து கொள்ள இளைஞர்கள் தயாராக இருந்தனர். பெற்றோர் எவ்வளவு வரதட்சணைக் கேட்டாலும் அதற்கு தலையாட்டி பொம்மைகளாகவும் ஆண்கள் இருந்தனர். ஆனால் இப்போது பெற்றோருக்கு எந்த சிரமமும் வைக்காமல் தாங்களாகவே தங்களது துணையைத் தேடிக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.
குடும்பத்தையும், சொத்து, பத்துகளையும் பார்த்து திருமணம் முடித்த காலம் மலையேறி, பெண்ணின் படிப்பு, திறமை போன்றவை காதல் திருமணங்களில் முன்னிறுத்தப்படுவதும் நல்ல விஷயமாகிறது.
பெற்றோரும் முன்பை விட தற்போது விட்டுக் கொடுக்கத் துவங்கிவிட்டனர். அவர்களுக்குப் பிடித்திருந்தால் போதும் என்று கூறி காதல் திருமணத்திற்கு ஒத்துக் கொள்கின்றனர்.
இந்த காதல் திருமணங்களில் முக்கியமான விஷயம் ஒன்றையும் கூற வேண்டும், வரதட்சணை என்ற பேய் ஓரளவிற்கு இந்த காதல் திருமணங்களால் ஒழிக்கப்பட்டு வருகிறது. சில காதல் திருமணங்கள் வரதட்சணையுடன் அரங்கேறுவதும் உண்டு. பல்வேறு தேவையற்ற சடங்குகளும் ஒழிக்கப்படுகின்றன.
ஆனால் இந்த காதல் என்பது எப்போது உருவாக வேண்டும் என்பதுதான் பார்க்க வேண்டிய ஒன்று. எழுத்திற்கு வேண்டுமானால் காதல் எப்போ வரும், எப்போ போகும் என்று தெரியாது, காதலுக்கு கண்ணில்லை என்றெல்லாம் பாடம் புகட்டலாம். ஆனால் உண்மையில், சரியான வயதில் வரும் காதல்தான் திருமணத்திலும், நல்ல வாழ்க்கையிலும் முடிகிறது.
இருவருமே நிரந்தர வேலையில் இல்லாமல், வெறுமனே சாலையில் பார்த்து, பின்னால் வந்து காதலித்து, இளம் வயதிலேயே பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் வறுமையிலும், விவாகரத்திலும்தான் போய் முடிகிறது.
எனவே, காதலிப்பதற்கும் சரியான காலம் வர வேண்டும். ஒருவர் நன்கு படித்து, ஒரு வேலையிலோ, ஏதேனும் ஒரு விஷயத்திலோ தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பிறகு தன்னைப் பற்றி சுயமாக சிந்திக்க முடியும் என்ற நிலையில் வரும் காதல்தான் நல்ல வாழ்க்கையாக அமையும்.
காலம் மாறலாம்... வாழ்க்கை என்பது எப்போதும் ஒன்றுதான். அதற்கு, படிப்பு, பணம், திறமை, குணம், உற்றார், உறவினர் என எல்லாமேத் தேவைப்படும். எனவே இளைஞர்களே.. தெளிவாக சிந்தித்து முடிவெடுங்கள்.