தனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்ளாமல், விவாகரத்தை ஏற்க மறுத்த மனைவியை, பழிவாங்கும் விதத்தில் பாலியல் விளம்பரம் கொடுத்த கணவனும், அவனது கள்ளக் காதலியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது ஏதோ வெளி நாட்டில் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இது நமது சென்னை மாநகரில்தான் நடந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டப் பெண் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கும், சென்னையில் கணினி நிறுவனத்தை நடத்தி வரும் மகேஷ் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த சூழ்நிலையில், மகேஷ் தன்னுடன் பணியாற்றும் ஒரு பெண்ணை விரும்பியுள்ளார். இதனால் அவரது மனைவி கோபப்பட்டு இதனைக் கண்டித்துள்ளார். இதனால் மனைவி தனது கணவனின் வீட்டை விட்டு வெளியேறி, உறவினர் ஒருவரது வீட்டில் தங்கியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், மகேஷ் விவாகரத்து கோரியுள்ளார். இதற்கும் அவரது மனைவி ஒப்புக் கொள்ளவில்லை. இந்த குடும்பப் பிரச்சினை ஒரு புறம் ஓடிக் கொண்டிருக்க, அந்த மனைவிக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
அவரது இணையதளத்தில், அவரது முழு முகவரியும் போட்டு விரும்புபவர்கள் என்னைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த சுமதி, சைபர் க்ரைம் காவல்நிலையத்திற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.
புகாரினை ஏற்றுக் கொண்ட சைபர் க்ரைம் காவல்துறையினர், துப்பறிந்து உண்மையைக் கண்டறிந்தனர். இதுபோன்ற விளம்பரத்தை கொடுத்தது யாரோ அல்ல, சுமதியின் கணவர் மகேஷ்தான் என்பது விசாரணையில் தெரிய வந்தது. தனது காதலுக்கும், விவாகரத்திற்கும் ஒப்புக் கொள்ளாத தனது மனைவியை மன ரீதியாக துன்புறுத்தும் வகையில் இந்த விளம்பரத்தை மகேஷ் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த குற்றத்திற்காக மகேஷூம், அவரது கள்ளக்காதலியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படியும் சில கணவர்கள் இருக்கிறார்கள்.. அதுவும் தமிழ்நாட்டில்?