காதல் என்பது இலையாகி, மொட்டாகி, மலர்ந்து, காயாகிதான் கனிகிறது. இது எல்லோருக்குமே பொருந்தும். காதலிப்பதை, காதலரிடம் சொல்வதை விட, தனக்கு காதல் எண்ணம் இல்லை என்பதை தன்னை சுற்றி வரும் காதலரிடம் சொல்ல வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
இதிலும், உறவு முறைக்குள், அத்தை மகன், மாமன் மகள் இருக்கும் போது, அவர்களை ஒன்று சேர்த்து உறவினர் பேச ஆரம்பிக்கும் போதே, அவர்களுடன் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை, அதற்கு ஆசையும் இல்லை, ஆர்வமும் இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியம்.அதற்கென காரணங்கள் இருந்தால் அதனையும் சொல்லிவிடுவது நல்லது.ஒரு சிலரை காரணமே இல்லாமல் பிடிப்பது போல், காரணமே இல்லாமல் பிடிக்காமல் போய் விடுவதும் உண்டு. எதுவாக இருந்தாலும் மிகத் தெளிவாக சொல்லிவிடுவது நல்லது.தங்களுடைய பெற்றோர் மட்டுமின்றி, தன்னுடைய உறவினர்கள் அல்லது சம்பந்தப்பட்ட பெண் அல்லது ஆணிடமும் நேரிடையாக சொல்லிவிடலாம்.காதலிக்க நினைப்பவர்கள் மட்டுமின்றி, உறவுக்குள் திருமணத்தை விரும்பாத அனைவருமே ஆரம்ப காலங்களில் சொல்லிவிடுவதுதான் பின்னர் உறவுகளில் விரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.ஏன் என்றால், உங்களுக்கு மணம் முடிக்க நினைத்திருக்கும் பெண்/ஆணுடன் நீங்கள் சந்திப்பதும், பேசுவதும் சாதாரணமாகவே நடைபெறும். இதனை பெரியவர்கள், உங்களக்கு பிடித்திருப்பதாக நினைத்துக் கொண்டு, திடீரென ஒரு நாள் திருமண நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறிப்பார்கள்.நாங்கள் மேற்கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளாதவர்கள்தான் இதுபோன்ற திருமணத்தில் மாட்டிக் கொண்டு சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிப்பார்கள். எனவே, முதலிலேயே உஷாராக இருப்பது உங்களுக்கும் நல்லது.மேலும், இதுபோன்ற உறவு முறைகளில் பெண்/ஆண் இருப்பதும், சில பெற்றோர்களுக்கு வசதியாகத்தான் இருக்கும். ஒரு வேளை நீங்கள் யாரையாவது காதலித்து அல்லது காதலிக்க ஆரம்பித்த விஷயம், உங்கள் வீட்டு பெரியவர்களுக்குத் தெரிய வந்தால், காதும் காதும் வைத்த மாதிரி, உங்கள் உறவுப் பையனை/பெண்ணை உடனே பேசி திருமணம் செய்து வைத்து விடவும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.உங்கள் பக்கமும் காதல் அந்த அளவிற்கு பலமடையாத நிலையில் இருந்தால் உங்கள் நிலை அதோ கதிதான். அதற்குப் பிறகான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.அதனால் உறவுகள் என்றுமே நமக்கு எதிரிகளாக நின்றுவிடக் கூடாது என்பதால் ஆரம்பத்திலேயே பிடிக்காத விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும்.