பல இடங்களில் சாகசங்கள் புரியும் போது ஏதாவது விபரீதமாகி விபத்து ஏற்படுவதுண்டு. அது சகஜம்தான்.
ஆனால் சில இடங்களில் விளையாட்டே வினையாகி விடுவதும் உண்டு. அதற்கு ஒரு உதாரணம்தான் நாம் கூறப்போகும் இந்த கதை.
இது கதை அல்ல நிஜம்.
பொதுவாக இத்தாலி நாட்டில் ஒரு பழக்கம் உண்டு. அதாவது, இத்தாலி நாட்டில் நடக்கும் திருமணத்தின் போது மணமகள் வைத்திருக்கும் பூங்கொத்தை, திருமணம் முடிந்ததும் தூக்கி வீசுவார்கள். அதனை யார் பிடிக்கிறார்களோ அல்லது அது யார் பக்கம் போய் விழுகிறதோ அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது ஒரு நம்பிக்கை.
எனவே, ஒவ்வொரு திருமணத்தின் போதும் பூங்கொத்து தூக்கி எறியப்படும். அதனைப் பிடிக்க, கல்யாணம் ஆகாத பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையே பெரும் மோதல் ஏற்படும். இறுதியாக பலரும் அதனை பிய்த்து வைத்துக் கொண்டிருப்பார்கள்.
இதில் ஒரு புதுமையைப் புகுத்த விரும்பியது ஒரு திருமண தம்பதியினர்.
அதாவது, இத்தாலி நாட்டில் டஸ்கன் நகரில் ஒரு திருமணம் நடந்தது. பூங்கொத்து வீசும் சம்பிரதாயத்தில் புதுமை புகுத்த விரும்பிய புதுமணமக்கள், பூங்கொத்தை வீசும் நிகழ்ச்சிக்கு ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்தார்கள்.
மணமக்களின் உறவினர் ஒருவரை விமானத்தில் அனுப்பி அதில் இருந்தபடி பூங்கொத்தை வெளியில் எறியச் செய்தனர். அப்போதுதான் வந்தது விபரீதம். பூங்கொத்தை அவர் எறிந்தபோது, சில பூக்கள் விமானத்தின் என்ஜினில் சிக்கிக்கொண்டன. இதனால் விமானம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, ஒரு இளைஞர் விடுதி மீது விழுந்தது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 2 பேர் காயம் அடைந்தனர். விமானிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. கீழே விழுந்ததில் விமானம் பெருமளவு சேதமடைந்தது.
சந்தோஷமாக முடிய வேண்டிய திருமணம், விளையாட்டால் விபரீதமானது.