உலகத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பட்டியலில் முதலிடம் வகிப்பது சீனாதான். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது சீனா அதற்கு அப்படியே மாறுதலான ஒரு விஷயத்திலும் முதலிடம் பிடிக்கலாம் என்று தோன்றுகிறது. அதுதான் விவாகரத்து.
சீனாவில் தற்போது விவாகரத்து செய்து கொள்ளும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த எண்ணிக்கை எப்படி உள்ளது என்றால், ஒவ்வொரு நாளும் சராசரியாக 4,500 விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்படும் அளவிற்கு உள்ளது.
மேலை நாடுகளில் உருவான இந்த விவாகரத்து தற்போது காற்று போல பல நாடுகளுக்கும் பரவிவிட்டது. ஆனால், மேலை நாடுகளில் இந்தியா போன்ற நாடுகளைப் பார்த்து ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் முறையைப் பின்பற்றத் துவங்கியுள்ளனர்.
ஆனால், இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள், வளர்ந்த நாட்டு மக்களைப் போல வாழும் பழக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். அதில் அவர்கள் தற்போது அதிகமாக பின்பற்றி வரும் முறைதான் விவாகரத்து.
சீனாவில் இந்த ஆண்டு துவங்கி முதல் 6 மாதங்களில் மட்டும் 8,48,000 தம்பதிகள் விவாகரத்து கோரி நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 விழுக்காடு அதிகமாகும்.
விவாகரத்து அதிகமாக இருக்கும் பகுதிகளில் ஷின்ஜியாங் உய்க்குர் மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. பீஜிங் நகரம் விவாகரத்து அதிகம் உள்ள நகரங்களில் 8-வது இடத்தில் உள்ளது. ஷாங்காய் நகரம் 6-வது இடத்தில் உள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மக்கள் தொகை வெகுவாக உயர்ந்து கொண்டிருந்த போது விவாகரத்துகள் மிகவும் குறைவாக இருந்தன. எப்போது மக்கள் தொகைக் குறைப்பு நடவடிக்கை துவங்கப்பட்டதோ அப்போதில் இருந்தே விவாகரத்துகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. மேலும், மக்கள் தொகைக் குறைப்பு நடவடிக்கை கடுமையாகப் பின்பற்றப்படும் பகுதிகளில்தான் விவாகரத்துகள் அதிகமாக பதிவாகின்றன என்ற புதிய ஆய்வும் தெரிய வந்துள்ளது.
2009ஆம் ஆண்டு மட்டும் 24,70,000 தம்பதிகள் விவாகரத்து பெற்று உள்ளனர். 2005-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஆண்டு தோறும் 7.6 விழுக்காடு தம்பதிகள் என்ற விகிதத்தில் விவாகரத்து செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் சீன அரசு தனது நாட்டு கலாச்சார சீரழிவு குறித்து கவலைக் கொண்டுள்ளது. மக்கள் தொகையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சீன அரசு, எப்படி விவாகரத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் குழம்பி வருகிறது.
ஒரு ஆண்டில் இத்தனை தம்பதிகள் விவாகரத்துக் கோருவதற்கான காரணங்களை ஆய்வு செய்து வருகிறது. அதன்படி, கணவன் ஒரு இடத்திலும் மனைவி ஒரு இடத்திலும் வேலை செய்வது தான் முக்கியப் பிரச்சினையாக உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்கின்றனர். பணி மாறுதல்கள், பதவி உயர்வு போன்றவற்றால் இருவரும் தனித்தனியாக வேலை பார்ப்பதால் குடும்ப உறவுகளில் நிலைத்தன்மை அற்றுவிடுகிறது. வேலை பார்க்கும் இடங்களில் சக பணியாளர்களுடன் ஏற்படும் ஈடுபாடு திருமண உறவை முறிக்கும் அளவிற்கு சென்று விடுகிறது. இதுபோன்று பல்வேறு காரணங்களால், சீனாவில் திருமண உறவுகள் சீரழிந்து, விவாகரத்து வரை செல்கிறது.
இப்படியே போனால் குடும்ப முறை அழிந்துவிடும் சூழ்நிலை ஏற்படலாம். இதனால் மக்கள் தொகைப் பெருக்கமும் நிச்சயம் அதிகரிக்கும் என்று பயம் கொள்கிறது சீனா. மக்கள் தொகைக் குறைப்பை கடுமையாக்குவதா, விவாகரத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதா என்று தெரியாமல் திணறுகிறது அரசு.