கணவன் - மனைவிக்கு இடையே ஏற்படும் ஒரு சில சண்டைகளுக்காக திருமணத்தையே ரத்து செய்யும் விவாகரத்தை தர முடியாது என்று உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தரசஸ் நகரைச் சேர்ந்த கல்லூரி முதல்வர் குருபக்ஸ் சிங், அரசு கல்வி நிலையத்தில் நூலகராக பணியாற்றும் தனது மனைவி ஹர்மீந்தர் கெளர் மீது விவாகரத்து வழக்கு தொடுத்தார்.
தனது மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கோருவதற்காக அவர் கூறிய காரணத்தில், லோரி பண்டிகையின் போது தன்னுடைய பெற்றோரை நண்பர்கள், விருந்தினர்கள் எதிரில் அவமதிக்கும் விதத்தில் பேசினார் ஹர்மீந்தர், எனவே என்னால் அவருடன் சேர்ந்து வாழ முடியாது, அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரி இருந்தார்.
இதனை நிராகரித்த நீதிபதிகள் பி, சதாசிவம், பி.எஸ். செளஹான் அடங்கிய அமர்வு, எப்போதாவது நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை சாக்காக வைத்துக் கொண்டு விவாகரத்து கோரக் கூடாது என்று தீர்ப்பளித்தனர்.
மேலும், கணவன் அல்லது மனைவியால் மற்றவர் உயிருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்தாலோ, விருப்பத்துக்கு மாறாக பாலுறவு கொள்ள அடிக்கடி வற்புறுத்தினாலோ, குரூரமாகத் தொடர்ந்து நடந்து கொண்டாலோதான் விவாகரத்து கோரிப் பெற முடியும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.