தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் புதிய சட்டம் நேற்று சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சட்டசபையில் நேற்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார்.
சட்ட மசோதாவில், உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் பிறப்பித்த ஆணையில், திருமணத்தை பதிவு செய்வதிலிருந்து கிடைக்கும் பயனானது, திருமணம் பதிவு செய்யப்படாத ஒரு நபருக்கு மறுக்கப்படக்கூடும் என்பதுதான், ஒரு திருமணம் பதிவு செய்யப்படாததன் விளைவு என்று கருத்து தெரிவித்துள்ளது.
வெவ்வேறு சமயங்களை சேர்ந்தவராக இருப்பினும், இந்திய குடிமக்கள் அனைவருடைய திருமணங்களும், எந்த இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறதோ அந்த மாநிலத்தில், அந்த இடத்தில் கட்டாயமாக பதிவு செய்யப்படுதல் வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்துகிறது.
எனவே, மாநிலத்தில் வெவ்வேறு சமயங்களை சேர்ந்த இந்திய குடிமக்கள் அனைவருடைய திருமணங்கள் அனைத்தும் கட்டாயமாக பதிவு செய்வதற்காக வகை செய்யும் பொருட்டு, தமிழகத்தில் திருமணங்கள் கட்டாயமாக பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்கு புதிய சட்டம் ஒன்றை இயற்றுவது தேவையென கருதப்படுகிறது. அரசு அந்த நோக்கத்திற்காக சட்டம் இயற்றுவதென முடிவு செய்துள்ளது.
திருமணம் எந்த முறைப்படி நடந்தாலும், எந்த சாதியினராக இருந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும் அனைத்து திருமணங்களையும் உள்ளடக்குவதோடு, மறு திருமணத்தையும் இந்த சட்டம் உள்ளடக்கும். இனமுறை சட்டங்கள், வழக்கம் அல்லது மரபுப்படி திருமண பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்த சட்டத்தின்படி திருமணப் பதிவு செய்யப்படுதல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.