புதிதாக திருமணமான தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல. அதிலும் பிரிந்திருக்கும் தம்பதிகள் சந்தித்துக் கொள்ளும் போது முத்தம் கொடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளனர்.
டெல்லி துவாரகா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் ஒரு இளம் ஜோடி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் முத்தத்தை பரிமாறிக் கொண்டதாகத் தெரிகிறது. இதை அவ்வழியே சென்ற சிலர் காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக காவலர்களும் விரைந்து வந்து, அந்த ஜோடியை கைது செய்து காவலில் வைத்தனர். இது குறித்து அந்த ஜோடியினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். எங்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததால் ஆர்ய சமாஜ் கோயிலில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தை பதிவு செய்து கொள்ளும் வரை இருவரும் அவரவர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம்.
இந்த நேரத்தில்தான் நாங்கள் துவாரகா ரயில் நிலையத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் முத்தம் கொடுத்துக் கொள்ளவில்லை. செல்போனில் நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போல புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம். இதை யாரோ சில விஷமிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்கள் எங்களை கைது செய்தனர். நாங்கள் திருமணமானவர்கள் என்று சொன்னதையும் காவல்துறையினர் கேட்கவில்லை. எங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிதர், தம்பதி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குக்கு தடை விதித்தார்.
மேலும் அவர் தனது தீர்ப்பில், புதிதாக திருமணமான தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல. அதிலும் பிரிந்திருக்கும் தம்பதிகள் சந்தித்துக் கொள்ளும் போது முத்தம் கொடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. தங்களுக்கு திருமணமாகிவிட்டது என்று கூறிய பிறகும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தது அதிர்ச்சியாக உள்ளது என்று அவர் கூறியுள்ளனர்.