சினிமா திரைப்படங்களில், எல்ஐசி பணத்திற்காக தானே இறந்தது போல ஒளிவு மறைவு வாழ்க்கை நடத்தும் வில்லனையும், கணவர் இறந்துவிட்டதாகக் கூறி பணத்தை வாங்கும் மனைவியையும் காட்டியுள்ளனர். ஆனால் இங்கே, எல்ஐசி பணத்திற்காக தனது மனைவியையே கூலிப் படை வைத்துக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30). இவருக்கும், உமா என்ற பெண்ணுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. உமா எம்.ஏ. பட்டதாரி. இவர்களுக்கு ஹரிஷ்மா (4) என்ற மகளும், சூரியப்பிரகாஷ் (2) என்ற மகனும் உள்ளனர்.
கடந்த 21-ந் தேதி வடக்கு இனமான்குளத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு மனைவி உமாவுடன் செந்தில் குமார் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். இரவில் அங்கு இருந்து ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்த போது நொச்சிகுளம் பேருந்து நிறுத்தம் அருகே செந்தில் குமார் வந்த மோட்டார் சைக்கிளை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர்.
வண்டியை நிறுத்தி செந்தில்குமாரை இருவர் மடக்கிப் பிடித்துக் கொண்டதாகவும், உமாவை ஒருவன் கத்தியால் குத்திவிட்டு கழுத்தில் இருந்த நகைகளை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். கத்திக் குத்துடன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உமா உயிரிழந்தார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனைவி உமா பெயரில் வாங்கப்பட்ட எல்.ஐ.சி. பாலிசியை எடுத்துச் சென்று, அதற்கான தொகையை கைப்பற்றுவதற்கு செந்தில்குமார் முயற்சி செய்ததும், அவர் பலரிடம் கடன் வாங்கி இருப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதனால் செந்தில்குமாரை காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது கூலிப்படையை ஏவி மனைவியை அவரே படுகொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்தது. உடனே காவல்துறையினர் செந்தில்குமாரை கைது செய்தனர்.
காவல்துறையினரின் விசாரணையில், செந்தில்குமார் அளித்த வாக்குமூலத்தில், முன்பு நான் எல்.ஐ.சி. ஏஜெண்டாக வேலை செய்தேன். அப்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதால் வாடிக்கையாளர்களின் எல்.ஐ.சி. பணத்தை கையாடல் செய்தேன். பின்னர் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி கையாடல் செய்த தொகையை திருப்பிக் கொடுத்தேன். இதனால் சமீப காலமாக எனக்கு அதிக பண நெருக்கடி ஏற்பட்டது. என் மனைவி உமா பெயரில் ரூ.20 லட்சத்துக்கு எல்.ஐ.சி. பாலிசி எடுத்தது நினைவுக்கு வந்தது. பாலிசி பணத்துக்கு ஆசைப்பட்டு அவளை கொலை செய்ய முடிவு செய்தேன். நான் வகுத்த திட்டப்படி கூலிப்படையினர் எனது மோட்டார் சைக்கிளை வழிமறித்து மனைவியை கொலை செய்தனர் என்று கூறியுள்ளார்.
உமாவை, அவரது கணவர் செந்தில்குமாரே கொலை செய்து விட்டு, கூலிப்படையை பயன்படுத்தியதாக ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணத்திற்காக மனைவியை கொலை செய்து, அழகான குடும்பத்தை சின்னாபின்னமாக்கியுள்ளார் செந்தில்குமார். தாயும் கொலை செய்யப்பட்டு, தந்தையும் கைதாகியுள்ள நிலையில் குழந்தைகளின் நிலை பரிதாபத்துக்குரியது.