தேனிலவோடு முடிந்த மணவாழ்க்கை
, வெள்ளி, 3 ஜூலை 2009 (11:38 IST)
தேனிலவில்தான் ஆனந்தமான மண வாழ்க்கை ஆரம்பமாகும். ஆனால், இங்கு ஒரு தம்பதிகளின் தேனிலவிலேய மணவாழ்க்கை முற்றிலுமாக முடிந்து போய்விட்டது.
சவுதிஅரேபியாவை சேர்ந்த புதுமண தம்பதிகள் தேனிலவைக் கொண்டாட மலேசியாவுக்கு சென்றனர். தேனிலவை இனிமையாக முடித்துவிட்டு தாயகம் திரும்புவதற்காக அவர்கள் மலேசியா விமான நிலையத்திற்கு வந்தனர்.
விமான நிலையத்தில் சோதனைகளை முடித்துவிட்டு விமானம் ஏறுவதற்காக காத்திருக்கும்போது பெண் அவசரமாக கழிவறைக்குச் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் மனைவி வரவில்லை. ஆனால் விமானம் புறப்படுவதற்கான நேரம் வந்து விட்டது. இதனால் கோபமடைந்த கணவன், தான் ஏற வேண்டிய விமானத்தில் ஏறி சவுதி அரேபியா சென்றுவிட்டார். இவர்களது வருகைக்காக சவுதி விமான நிலையத்தில் காத்திருந்த உறவினர்களிடம், மனைவி மலேசியாவிலேய இருப்பதாகக் கூறிவிட்டு வேறு ஒன்றும் சொல்லாமல் நடையைக் கட்டியுள்ளார்.
சாவகாசமாக கழிவறையில் இருந்து வெளியே வந்த மணப்பெண்ணோ, விமான நிலையத்தில் தனது கணவனைத் தேடி அலைந்தார். பின்னர் விமான நிலைய அதிகாரிகளிடம் விசாரித்ததில் அவளது கணவன் விமானத்தில் ஏறி சவுதி சென்றுவிட்டது தெரிய வந்தது.
பின்னர் எப்படியோ மற்றொரு விமானம் மூலம் சவுதி சென்றார் மணப்பெண். தாயகம் சென்றதும் முதலில் நேராக நீதிமன்றம் சென்று தன் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார் அவர்.
நீங்களாச்சும் கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாம். அவராச்சும் கொஞ்சம் காத்திருந்திருக்கலாம். என்ன சொல்றீங்க?