திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தும் முறை. தற்போது சமுதாயத்திற்கு பெரும் சவாலாக விளங்குகிறது. இந்த விஷயத்தில் ஒரு அதிரடியான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
செக்ஸ் அல்லது உடல் ரீதியான தேவைக்காக மட்டும் குடும்பம் நடத்தும் பெண்ணுக்கு மனைவிக்கான சலுகைகள் பெற உரிமை கிடையாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. . எனினும், விதி விலக்காக 4 நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரை எதிர்த்து பேச்சியம்மாள் என்ற பெண் குடும்பநல நீதிமனற்த்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னுடன் குடும்பம் நடத்தி விட்டு பிரிந்து சென்று விட்டதால் தனக்கு வேலுசாமி ஜீவனாம்சம் தர வேண்டும் என மனுவில் தெரிவித்தார். அதை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் ரூ.500 அளிக்குமாறு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.
எனவே, உச்ச நீதிமன்றத்தில் வேலுசாமி மேல்முறையீடு செய்தார். அவர் தனது மனுவில், எனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கிறார். பேச்சியம்மாளுடன் சில காலம் சேர்ந்து வாழ்ந்தாலும் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே, ஜீவனாம்சம் பெற அவருக்கு உரிமை கிடையாது என தெரிவித்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் மார்கண்டேய கட்சு, டி.எஸ்.தாக்கூர் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்சு விசாரித்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், பேச்சியம்மாளுக்கு ஜீவனாம்சம் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஒரு பெண், திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தினால் மனைவிக்கான உரிமைகள் மற்றும் சலுகைகளை பெற முடியாது. எனினும், திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தினாலும் 4 நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மனைவிக்கான உரிமையை பெற அந்த பெண்ணுக்கு தகுதி உண்டு என தெரிவித்தது.அந்த நிபந்தனைகள் வருமாறு: 1) அந்த தம்பதியானது, சமூகத்தில் மனமொத்த கணவன்-மனைவி போன்று வாழ்ந்திருக்க வேண்டும். 2) ஆண், பெண் இருவருமே சட்டப்படி திருமண வயதை அடைந்திருக்க வேண்டும். 3) இருவருமே அதுவரை திருமணமாகாமல் இருப்பது உட்பட, சட்ட ரீதியான திருமணத்துக்கு தேவையான அனைத்து தகுதிகளும் அவர்களுக்கு இருக்க வேண்டும். 4) சுய விருப்பத்துடன் கணவன்-மனைவியாக அவர்கள் சேர்ந்திருப்பதோடு, உலகின் பார்வையில் மனமொத்த தம்பதியாக குறிப்பிட்ட காலம் வரை வாழ்ந்திருக்க வேண்டும்.இது தவிர, நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில், கணவன்-மனைவி போன்று சேர்ந்து வாழும் அனைவருமே, 2005-ம் ஆண்டு அமலுக்கு வந்த குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் பலன்களை பெற முடியாது. மேற்கண்ட நிபந்தனைகள் ஆதாரத்துடன் நிரூபித்தால் மட்டுமே, அத்தகைய ஆதாயங்களை அடையலாம். ஒரு மனிதன், ஒரு பெண்ணை தன்னுடைய செக்ஸ் உறவுக்காகவோ அல்லது தனது தனிப்பட்ட வேலைக்காகவோ பணம் கொடுத்து பராமரித்து, பாதுகாத்து (கீப்) வந்தால், அந்த உறவை இயற்கையான திருமணமாக எங்களால் கருத முடியவில்லை.
சேர்ந்து வாழும் பெண்களுக்கு மனைவிக்கான உரிமைகளில் இருந்து விலக்கு அளிக்கும் எங்களுடைய கருத்தில் எந்தவித சந்தேகமும் கிடையாது. சட்டத்தை இயற்றவோ அல்லது திருத்தம் செய்யவோ நீதிமன்றத்தால் முடியாது. சட்டத்தை அதன் மொழி வடிவில் இருந்து மாறுபாடாக விளக்கி கூறவும் முடியாது. நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தில், இயற்கையான திருமண உறவு என்றே கூறப்பட்டு இருக்கிறது. சேர்ந்து வாழும் உறவு என்று கூறப்படவில்லை.
இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின் 125-வது பிரிவின் படி, சட்டப்படி திருமணமான மனைவி, சார்ந்து வாழும் பெற்றோர், குழந்தைகள் ஆகியோர் மட்டுமே ஒரு மனிதனிடம் இருந்து பராமரிப்பு தொகையை பெற உரிமை உள்ளவர்கள். ஆனால், தற்போது இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை சட்டம், சற்று விரிவு படுத்தப்பட்டிருக்கிறது. திருமண உறவு மட்டுமன்றி, இயற்கையான திருமண உறவு உடையவரும் பராமரிப்பு தொகையை பெறலாம்.
நாட்டில் மாறி வரும் புதிய சமூக தோற்றத்தை கருத்தில் கொண்டு, இந்த சட்டத்தை பாராளுமன்றம் இயற்றியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, சேர்ந்து வாழும் உறவு குறித்து தெளிவாக வரையறை செய்யப்படவில்லை. இதை விளக்குவதில் இந்த நீதிமன்றம் நேரடி விவாதம் செய்யவில்லை. எனினும், இந்த நாட்டில் இது போன்ற பெண்கள் ஏராளமாக இருப்பதால், நீதிமன்றத்தின் முன்பாக பல வழக்குகள் வரலாம். அதனால், குடும்ப வன்முறை சட்டம் குறித்து விரிவாக விளக்க வேண்டியுள்ளது. எனவே, அதிகாரப்பூர்வமான ஒரு முடிவு இதில் அவசியமாகிறது.
அமெரிக்காவின் பிரபல நடிகர் லீ மார்வின் மற்றும் அவருடன் நீண்டகாலமாக சேர்ந்து வாழ்ந்த மிச்செலி ஆகியோருக்கு இடையிலான வழக்கில் 1976-ம் அண்டு கலிபோர்னியா உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இங்கே நினைவு கூறலாம். திருமணம் செய்யாமல் பல ஆண்டுகளாக இருவரும் சேர்ந்து வாழ்ந்ததை தொடர்ந்து, அந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.
தற்போது, இந்த நீதிமன்றம் முன்பாக உள்ள வழக்கைப் பொறுத்தவரை வேலுசாமியின் முதல் மனைவி லட்சுமியின் கருத்துகள் கேட்கப்படவில்லை. இரண்டு நீதிமன்றங்களுமே தவறான முடிவுக்கு வந்துள்ளன. எனவே, லட்சுமியின் கருத்துகளை கேட்க கீழ் நீதிமன்றத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. லட்சுமி, சட்டப்படி வேலுசாமியை மணந்து கொண்ட மனைவிதானா? என்பதை ஆய்வு செய்வதற்காக குடும்ப நல நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை திருப்புகிறோம் என்று தீர்ப்பில் கூறியுள்ளனர்.