விவாகரத்து வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, திருமணத்துக்கு பிறகு ஆணுக்கும், பெண்ணுக்கும் சுதந்திரம் பறிபோய் விடுகிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
ராணுவ அதிகாரி ஹிதேஷ் என்பவருக்கும், கணினி நிறுவன உரிமையாளரான அவருடைய மனைவிக்கும் இடையே விவாகரத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதிகள் தீபக் சர்மா, கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
கணவர் ஹிதேஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், எனது கட்சிக்காரரின் மனைவி, திருமணத்துக்கு பிறகு தனது சுதந்திரம் பறிபோய் விட்டதாக குற்றம் சாட்டி தானாக முன்வந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். இருவரும் 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். இப்போது திடீரென்று விவாகரத்துக்கு மறுக்கிறார் இது என்ன நியாயம்? என்று கேள்வி கேட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், திருமணத்திற்குப் பிறகு சுதந்திரம் என்ற கேள்விக்கே இடம் இல்லை, கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி இருவருமே சுதந்திரத்தை இழந்து விடுகிறார்கள் என்று குறிப்பிட்டனர்.
தொடர்ந்து வழக்கறிஞர், விவாகரத்து கொடுக்க முடியாது என்று மனைவி தொல்லை தருவதால் எனது கட்சிக்காரருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
இதற்கு, திருமணத்தால் கிடைக்கும் ஆதாயம் இதுதான் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், கணவனும் மனைவியும் தங்கள் சுயநல எண்ணத்தை கைவிட்டு தங்களுடைய பெண் குழந்தையின் நலனை எண்ணிப்பார்த்து நல்ல முடிவு எடுக்க வேண்டும், இது பற்றி இருவரும் ஒருவருக்கொருவர் கலந்து பேசி ஒரு சமரச முடிவுக்கு வருவதுதான் குழந்தையின் எதிர்காலத்துக்கு நல்லது என்று யோசனை தெரிவித்தனர்.