திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுவது உண்மையோ பொய்யோ ஆனால் இந்த திருமணம் நிச்சயமாக சொர்கத்தில் நடந்தது என்று கூறினால் அது மிகையில்லை.
ஆம், அகமதாபாத்தில் தீபன் ஷா - அருஷி ஷா இணைக்கு நடந்த திருமணத்தைத்தான் சொர்கத்தில் நடந்த திருமணம் என்கிறோம். அதற்குக் காரணம், திருமணம் நடந்த, நடத்தப்பட்ட விதம்தான்.
சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் ஆடம்பரத்தை வெளிப்படுத்தும் நாம், திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம்.. ஆனால் இவர்களது திருமணம் எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் இயற்கையான முறையில் நடந்தேறியுள்ளது.
திருமணத்தின் போது மண்டபத்தை அலங்கரிக்கும் மின் விளக்குகள் இல்லை, குடித்ததும் தூக்கி எறியும் டம்ளர்களோ, தாம்பூல பிளாஸ்டிக் கவர்களோ எங்கும் காணப்படவில்லை. திருமணத்தின் முடிவில் பூமியையோ, காற்றையோ மாசுபடுத்தும் எந்த பொருளும் மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை.இதனை இயற்கைக்கு ஆதரவு அளிக்கும் திருமணமாக நடத்துவது என்று முடிவெடுத்து சிறப்பாக நடத்தியுள்ளனர் தீபன் ஷா - அருஷி ஷா பெற்றோர்கள். திருமணம் நடந்த வீடு முதல், மணமக்கள் வரை இயற்கையோடு இணைந்திருந்தார்கள்.மணமகன் பருத்தி வேட்டி அணிந்திருக்க, மணமகள் காதி பட்டு சேலையில் இருந்தார். விருந்து நடைபெறும் இடத்தில் பன்னீர் டிக்கா, ஸ்பிரிங் ரோல், ரசாயனக் கலவையுடன் கண்ணைக் கவரும் இனிப்புகள் என எதுவும் இல்லை. அதற்கு முற்றிலும் மாறாக, உடலுக்கு உகந்த வேக வைத்த வேர்க்கடலை, சுவையான பழங்கள் தான் இருந்தன.இதையெல்லாம் படித்ததும், திருமணத்தை ஆடம்பரமாக நடத்த காசில்லாதவர்களாக இருக்கும் என்று எண்ணலாம். அதுதான் தவறு, திருமண வீட்டார் ஒன்றும் இல்லாதவர்கள் இல்லை. பணக்காரர்கள்தான். இருந்த போதிலும் தங்களது திருமணம் மூலமாக மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
திருமண மண்டபத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து சாமான்களும் செப்பு, வெள்ளி, பித்தளையில் இருந்தன. பெண்ணிற்கு சீதனமாக டிவியோ, வாஷிங்மெஷினோ தரப்படவில்லை. ஒரு பசுவும், கன்றும் சீதனமாக அளிக்கப்பட்டது. பரிசுப் பொருட்களிலும் பிளாஸ்டிக் தவிர்க்க என்று திருமணத்திற்கு வந்தவர்களுக்கும், திருமண பத்திரிகையில் வேண்டுகோள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மணமகள் குடும்பத்தினர் மிகுந்த செல்வந்தவர்கள் என்ற போதிலும், திருமணம் வீட்டில் எளிமையாக நடந்தது. முதல்நாள் வரவேற்பில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு முற்றிலும் ரசாயனக் கலப்பின்றி விளைவிக்கப்பட்ட காய்கறிகளால், தூய நல்லெண்ணையில் தயாரான புலாவ் பரிமாறப்பட்டது. உடலுக்கு உகந்த உணவுகள் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. நமது பூமியைக் காக்க பெரிய பெரிய நாடுகளின் கொடிகள் பறந்து கொண்டிருக்க, பத்து கார்களில் பலத்த பாதுகாப்போடு செல்லும் நாட்டுத் தலைவர், மாநாட்டுக் கட்டிடத்திற்குள் கால் மேல் கால் போட்டுப் பேசுவதால் எந்த பலனும் கிட்டப்போவதில்லை.
தீபன் ஷா - அருஷி ஷா போன்றவர்கள் தங்களது வாழ்கை முறையில் மேற்கொள்ளும் சிற்சில மாற்றங்கள்தான் பூமியைக் காக்கும் என்பதை எடுத்துக் காட்டும் திருமணமாகவே இத்திருமணம் உள்ளது.இப்போது கூறுங்கள், இயற்கை இழையோட நடந்த இந்த திருமணம் சொர்கத்தில் நடந்தேறியது என்பதில் தவறில்லையே?