காதலித்து வந்த தனது காதலன், தன்னை நிராகரித்துவிட்டு, பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய காதலனை காதலர் தினத்தன்று விஷம் ஊற்றிக் கொன்றுள்ளார் காதலி.
இந்த சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்துள்ளது.
கிருஷ்ண குப்தா என்ற தொழிலதிபரும், மம்தாவும் (26) ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். மம்தா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கிருஷ்ண குப்தாவை வலியுறுத்தும்போது அதற்கு அவர் மறுத்துள்ளார்.
மேலும், தனது பெற்றோர் ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்துள்ளனர் என்றும், அவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
இதனால் மன வருத்தம் அடைந்த மம்தா மனதிற்குள் ஒரு சதிதிட்டம் தீட்டினாள். அதன்படி காதலர் தினத்தன்று தனது காதலர் கிருஷ்ண குப்தாவை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
கிருஷ்ண குப்தாவும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மம்தாவின் பெற்றோர்கள் இருக்கவில்லை.
மம்தா மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு கிருஷ்ண குப்தா மறுத்துள்ளார். பின்னர் மம்தா, தனது காதலர் தினப் பரிசு என்று கூறி சாப்பிட எதையோக் கொடுத்துள்ளார். அது விஷம் என்பது குப்தாவிற்கு தெரியாமல் அதனை சாப்பிட்டுள்ளார். உடனே குப்தா வாந்தி எடுத்து வயிற்றுவலியால் துடித்தார்.
உடனே மம்தா வீட்டை உட்புறமாக தாழ்பாள் போட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டு ஒரு சில மணி நேரங்கள் கழித்து தனது பெற்றோருடன் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டிற்குள் குப்தா உயிரிழந்திருப்பது கண்டு மம்தாவும், அவரது பெற்றோர்களும் கதறி உள்ளனர். காதலியின் வீட்டில் குப்தா தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
இந்த கொலையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், மம்தாவிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மம்தா தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதால் குப்தாவை விஷம் கொடுத்து கொலை செய்ததாக மம்தா கூறினார். இதையடுத்து மம்தாவையும், அவரது பெற்றோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.