பிப்ரவரி மாதம் பிறந்தால் காதலர் தினக் கொண்டாட்டங்கள் தான் களை கட்டும். ஆனால் இந்த ஆண்டு எதிர்மாறாக காதலர் தின எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே நூதனமான போட்டி களை கட்டியுள்ளது.
காதலர் தினம் கொண்டாட ஒவ்வொரு காதலர்களும் பல்வேறு திட்டங்களை வகுத்துக் கொண்டு இருப்பார்கள். காதலிக்கு என்ன பரிசு கொடுக்கலாம், எங்கு அழைத்துச் செல்லாம் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
இந்த வேளையில், காதலர் தினம் கொண்டாடும் ஜோடிகளுக்கு கட்டாயத் திருமணம் நடத்தி வைப்போம் என்றும், அரை குறை ஆடையுடன் திரியும் பெண்களுக்கு புடவை அளிக்கப்படும் என்றும் ஸ்ரீ ராம சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
முதலில் இந்த அதிரடி அறிவிப்புக்கு மனம் கலங்கிப் போன காதலர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தனர். பின்பு இணைய தளம் வழியாகவே காதலர் தின ஆதரவாளர்கள் ஒன்று கூடி ஒரு திட்டத்தை வகுத்தனர்.
ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்காமலேயே இணைய தளத்தின் மூலமாக மட்டும் 5 ஆயிரம் பேர் தங்கள் ஆதரவை அளித்துள்ளனர். இது தவிர, சென்னையில் 2 ஆயிரம் பேர், பெங்களூரில் ஆயிரத்து 500 பேர் என்று காதலர் தின ஆதரவாளர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.
இணையதளத்தின் வாயிலாகவே பேசிக்கொண்ட இவர்களுடைய திட்டம் என்ன தெரியுமா? காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்ரீ ராம சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக்குக்கு காதலர் தின வாழ்த்து அட்டையுடன் இளஞ்சிவப்பு நிற ஜட்டியை அனுப்பி வைப்பது தான். இது அமைதி வழி போராட்டம் என்பதாலோ என்னவோ இளஞ் சிவப்பு நிறத்தை ஆதரவாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.
முத்தாலிக்குக்கு அனுப்புவதற்காக ஜட்டிகளை சேகரிக்கும் பெட்டி ஒன்று பெங்களூர் இன்பேன்ட்ரி சாலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு சில பெண்கள், முத்தாலிக் வீட்டு முகவரிக்கே `ஜட்டிகள்' அடங்கிய பெட்டியை பார்சல் மூலம் அனுப்பி வைத்தனர்.
சென்னை காதலர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன, ராயப்பேட்டையில் உள்ள மெட்ராஸ் டெர்ராஸ் ஹவுஸ் என்ற இடத்தில் முத்தாலிக்குக்கு அனுப்புவதற்கான ஜட்டிகளை திரட்டுவதற்கான பெட்டி வைக்கப்பட்டுள்ளது. முத்தாலிக்குக்கு ஜட்டி அனுப்பும் போராட்டத்துக்கு சென்னையில் இதுவரை 600 பேர் ஆதரவு அளித்துள்ளர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காதலர் தின ஆதரவாளர்கள் ஜட்டிகளை திரட்டும் அதே வேளையில், ஒரு கை பார்க்காமல் விட மாட்டோம் என்று ஸ்ரீ ராம சேனா தலைவர் முத்தாலிக் கூறுகிறார்.
எங்களுக்கு ஜட்டி அனுப்பி வைக்கும் பெண்களுக்கு இந்திய பாரம்பரிய உடையான சேலையை வழங்க தீர்மானித்து இருக்கிறோம். இதுவரை 150 சேலைகள சேகரித்து இருக்கிறோம். ஜோடியாக திரிபவர்களை பிடித்து பெற்றோரிடம் அல்லது காவல்துறையிடம் ஒப்படைப்போம் என்று முத்தாலிக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்து மக்கள் கட்சி சார்பாக, சென்னையில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் முன்பாக இன்று காதலர் தின வாழ்த்து அட்டை எரிப்பு போராட்டம் நடைபெறுகிறது. மேலும், 14-ந் தேதி அன்று பொது இடங்களில் அறுவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையிடம் பிடித்து கொடுக்கவும் இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளதாக அந்த கட்சியின் மாநில செயலாளர் செந்தில் குமார் அறிவித்து இருக்கிறார்.
இதற்கு நடுவே, காதலர் தினத்தன்று வன்முறையில் ஈடுபடுபவர்களை மத்திய அரசு அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்காது என்று உள்துறை அமைச்சரும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.