காதலர் தினமும் இந்தியர் கண்ணோட்டமும்
, புதன், 12 பிப்ரவரி 2014 (18:04 IST)
பிப்ரவரி 14 ஆம் தேதி, இந்த நாளுக்கு மேற்கொண்டு அறிமுகம் தேவையில்லை. காதலர்களுக்காகப் போராடிய வாலண்டைன் என்ற பாதிரியார் மறைந்த நாள் இது. காலத்தால் அழியாத காவியங்களைக் காதலர்களால் மட்டுமே படைக்க முடியும். அத்தகையவர்கள் காதலர் தினத்தை விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் இந்த நாள், மேற்கத்திய நாகரிகத்தின் அடையாளம் என்று சிலரால் விமர்சனம் செய்யப்படுகிறது. இன்னும் சிலரால் இந்திய பாரம்பரியம் என்பது பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்கள்தான் என்றும் சொல்லப்படுகிறது. காதல் என்பதே ‘காலம் கெட்டுப் போனதன் விளைவு’ என்று கூட சொல்லப்படுகிறது.ஆனால், இந்திய வரலாற்றில் எப்போதுமே காதலுக்குச் சிறப்பான இடம் உண்டு. அது காலம் காலமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப் போனால், காதலர்கள் பல ஆண்டுகளாகவே இங்கே கொண்டாடி வருகிறார்கள்.இந்து திருமணங்களில் எட்டு வகைகள் உண்டு. அதில் ராக்ஷச திருமணம் என்றும், கந்தர்வ திருமணம் என்றும் திருமண வகைகள் உண்டு. இதில், ராக்ஷச திருமணம் என்றால் ஓடி போய் திருமணம் செய்வது. கந்தர்வ திருமணம் என்றால் வெறும் காமத்துக்காக திருமணம் செய்து கொள்வது. இன்றைய ‘சேர்ந்து வாழும் கலாச்சாரத்தையும்’ கந்தர்வ விவாகத்தில் சேர்த்துக்கொள்ளலாம். இவை அனைத்தும் சாத்திரத்தின் படி அங்கீகரிக்கப்பட்டவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
கிருஷ்ணர் ராதையைத் திருமணம் செய்தது ராக்ஷச திருமண முறையில்தான். முருகன் வள்ளியைக் கரம் பிடித்ததும் காதல் புரிந்துதான். தம்பியின் காதலுக்கு முழுமுதற் கடவுளான விநாயகர் உதவவும் செய்தார். ஏன், சிவனும், பார்வதியும் கூட காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தவர்கள்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. தவிர, இறைவனையே காதலனாகவும், கணவனாகவும் நினைக்கும் பக்தி இலக்கியங்கள் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன.