அழகாக அலங்காரம் செய்து கொண்டு புதிய ஆடை ஒன்றை அணிந்து கொண்டு ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறோம். ஆனால் வழியிலேயே ஆடையில் சேறு பட்டு விடுகிறது அல்லது கம்பியில் பட்டு ஆடை கிழிந்து விடுகிறது.உடனடியாக நாம் என்ன செய்வோம், அங்கேயே ஆடையை சுத்தம் செய்ய முடியுமா அல்லது பின் கொண்டு தைக்க முடியுமா என்று பார்ப்போம். அல்லது வீட்டிற்கு சென்று வேறு ஆடை அணிந்து கொண்டு வருவோம்.இந்த நிலையில் நமது மனதில் சிறிது வருத்தம் இருக்கத்தான் செய்யும். இதே நிலைதான் ஒருதலைக் காதலும்.ஒருவரை நாம் நேசிக்கிறோம். அவருடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அவருக்கு நம்மீது விருப்பம் இல்லாவிட்டால் அதற்காக அழுது புலம்பி, தாடி வளர்த்து, குடித்து மண்ணாவதால் யாருக்கு லாபம்.
எனவே ஒருவரை விரும்பும் போதே, அவர் அந்த காதலை நிராகரித்துவிட்டால் அதற்காக மனம் கலங்கக் கூடாது என்ற ஒரு ஊன்றுகோலையும் உங்கள் மனதில் ஒரு புறம் வளர்த்துக் கொள்ளுங்கள். அப்படி உங்கள் காதலை அவர் ஏற்காத போது, உங்கள் மனம் தளர்ந்து விழும் நேரத்தில் இந்த ஊன்றுகோல் பயனுள்ளதாக அமையும்.
அவர் உங்களை நிராகரித்ததற்கான நியாயமான விஷயங்களை எண்ணிப் பாருங்கள். உங்களுக்கு பிடிக்காத ஒருவர் உங்களிடம் அவரது காதலை சொன்னால் நீங்களும் மறுப்பீர்கள்தானே, அதையேத்தான் அவரும் செய்துள்ளார் என்று அவரது மறுப்பை முதலில் நியாயப்படுத்துங்கள்.
நீங்கள் விரும்பியவர், உங்கள் காதலை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் உடனே அவரை வெறுக்கத் துவங்குவதும் சரியல்ல. அது உங்கள் காதலையே கொச்சைப்படுத்திவிடும்.
எனவே, நீங்கள் காதலித்தவரை விட்டு சற்று விலகி விடுங்கள். சில நாட்களுக்காவது உங்கள் பார்வையில் அவர் இல்லாத படி பார்த்துக் கொள்ளுங்கள். அதற்காக ஊரை விட்டே ஓட வேண்டும் என்றில்லை. புண் பட்ட காயத்தில் மேலும் மேலும் அம்பு வந்து பாய்வது போன்ற ஒரு நிலைமையை உருவாக்காதீர்கள்.
அவர் முன்பு சோகமாக தாடி வளர்த்துக் கொண்டு அலைவது, உயிரை விடப் போகிறேன் என்று கடிதம் எழுதுவது எல்லாம் தேவையற்ற வேலை, இதனால் உங்கள் மீதான கொஞ்ச நஞ்ச நல்ல கருத்தும் தவிடுபொடியாகிவிடக் கூடும்.
உங்களை நீங்கள் சுறுசுறுப்பாகவும், ஏதாவது முக்கியமான பணியில் ஈடுபடுத்திக் கொள்ளவும் முனையுங்கள். இதனால் உங்கள் மனதில் புத்துணர்வு பிறக்கும்.
நீங்கள் செய்யும் செயல்கள், இவரை இழந்துவிட்டோமே என்று உங்கள் காதலை மறுத்தவரை எண்ண வைக்க வேண்டுமேத் தவிர, அப்பாடா, தப்பித்தோம் என்று நினைக்க வைக்கக் கூடாது.
நன்றி: பேராசிரியர் மருத்துவர் காமராஜ்
புத்தகம் : காதலிப்பது எப்படி?