எல்லாவற்றையும் கொட்டீத் தீர்க்க வேண்டாம்
, புதன், 11 நவம்பர் 2009 (15:31 IST)
காதலிக்கத் துவங்கிய நேரத்தில் நிறைய மனம் விட்டுப் பேசுவார்கள். ஆனால் பெரும்பாலான காதலர்களின் பேச்சில், அவர்களைப் பற்றிய விஷயங்களை விட, அவர்களது குடும்பம், நண்பர்கள் பற்றிய விஷயங்கள்தான் அதிகமாக இருக்கும்.ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள, தங்களைப் பற்றிய விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், தன்னைப் பற்றியும், தனக்கு நெருங்கியவர்கள் பற்றிய ரகசியங்களையும் சொல்ல வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
சில ரகசியங்கள் சிலருக்குத் தெரியாமல் இருப்பதுதான் நல்லது. எதையாது மறைத்தால் அது காதலருக்கு செய்யும் துரோகமாக நினைக்கக் கூடாது. உங்களை சார்ந்தவர்கள் பற்றிய ரகசியங்களை காப்பது உங்கள் கடமை என்றுதான் நினைக்க வேண்டும்.ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனையோ நல்ல மற்றும் கெடட் விஷயங்கள் நடந்து முடிந்து போயிருக்கும். அதனையெல்லாம் காதலர் / காதலி அறிந்து கொண்டே தீர வேண்டும் என்ற கட்டாயமில்லை. அப்படி அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும் அதற்கு இது நேரமில்லை. தெரிய வேண்டிய நேரத்தில் சொல்லிக் கொள்ளலாம்.எதையாவது பேச வேண்டும் என்ற எண்ணத்தில் தேவையில்லாததெல்லாம் பேசினால் ஆபத்துத்தான் வரும்.
சில தேவையில்லாத விஷயங்களைப் பேசுவதால், அதனை மற்றவர் தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் மீதான ஒரு அதிருப்தியையும் ஏற்படுத்தலாம்.எதைத்தான் பேசுவது என்று நீங்கள் கேட்கலாம், உங்களுக்கு சம்பந்தப்படாத நிகழ்ச்சிகள், சினிமா நட்சத்திரங்களைப் பற்றி, சினிமாத் திரைப்படங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், மிகப்பெரிய தலைவர்கள் என ஆர்வமிக்க எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் பேசுங்கள். சொந்த வாழ்க்கையை மட்டும் கொஞ்சம் மிச்சம் வையுங்கள்.உங்கள் நெருங்கிய நண்பர்களின், உறவினர்களின் குறைகளைப் பற்றி எப்போதும் சொல்லாதீர்கள். இதனால் அவர்கள் மீது உங்கள் காதலர்/காதலிக்கு தவறான அபிப்ராயம் ஏற்பட்டுவிடக் கூடும்.
மேலும், நீங்கள் எல்லாவற்றையும் கூறிய பின்னரும், மற்றவர் ஏதும் கூறாமல் இருந்தால் அதனால் ஒரு ஏமாற்றம் ஏற்படும். நாம்தான் ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்ற கவலை உங்களை வாட்டத் துவங்கும்.எனவே, ஆரம்பத்திலேயே ஒரு எல்லைக்குள் நீங்கள் இருந்தால் எப்போதும் சிக்கல் இல்லை. எதையும் உளறிக் கொட்டாமல், சிக்கலை ஏற்படுத்தாமல், சுமூகமான உறவு நிலவ நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சொல்ல வேண்டியதை மட்டும் சொல்வது, தேவையில்லாதவற்றை சொல்லி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது, முக்கியமான விஷயங்களை மறைக்காமல் சொல்வது நீண்ட கால உறவுக்கு நல்லது.