காதலால் காதலன் ஆவார்கள், கணவனாக ஆவார்கள், ஆனால் இங்கு ஒருவர் தனது காதலால் ஏழை ஆனவர் என்று சொன்னால் நீங்கள் வியப்பது எங்களுக்குத் தெரிகிறது.
ஓ.. காதலி எல்லா சொத்துக்களையும் ஏமாற்றி பிடுங்கிக் கொண்டிருப்பார் என்று யூகம் சொல்லுவீர்கள்.
அதெல்லாம் ஒன்றும் இல்லை. இந்தியாவில் கொடிகட்டி பறந்த நாடக நடிகர் ஒருவர், தனது காதல் மனைவிக்காக, எல்லா சொத்து சுகங்களையும் இழந்து தற்போது ரஷியாவில் தெருவை பெருக்கி அதன் மூலம் வருமானம் பெறுகிறார்.
மும்பையை சேர்ந்தவர் அர்மன் குமார் ஜா. சில காலத்திற்கு முன்பு பல மேடை நாடகங்களில் நடித்து பிரபலமானார். பணம், புகழ், செல்வாக்கு என்று மதிப்பும் மரியாதையுடன் வசதியாக வாழ்ந்து வந்தார். இந்த நேரத்தில்தான் அவரது வாழ்க்கையில் காதல் நுழைந்தது. தலை விதி மாறியது.
ரஷியாவில் இருந்து கரோலினா என்ற பெண், இந்திய நடனத்தை பயில்வதற்காக மும்பை வந்தார். நடனம் பயின்று கொண்டிருந்தபோது, அவருக்கும், நாடக நடிகர் அர்மன் குமார் ஜாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் நாடு, மதம், மொழி ஆகியவற்றை தாண்டி தங்களது காதலை வளர்த்தனர்.
காதல் திருமணமாக கனிந்தது. இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டு, மும்பையில் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கினார்கள். இதுவரை இன்பமாக இருந்த வாழ்க்கையில் விதி விளையாடியது.
கடுமையான குளிர் நாடான ரஷியாவில் வசித்த கரோலினாவால் இந்திய வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் அவர், கணவரை ரஷியாவுக்கு அழைத்தார். காதல் மனைவியின் அன்பு கட்டளையை மறுக்க முடியாத அர்மன் குமார் ஜா, மும்பையில் தான் சம்பாதித்த சொத்துகள் அனைத்தையும் விற்று பணமாக்கினார். மனைவி கரோலினாவுடன் ரஷியா புறப்பட முடிவு செய்தார். பாஸ்போர்ட், விசா என்று, ரஷியாவில் தங்குவதற்கான அனைத்து ஆவணங்களை பெறுவதற்குள்ளாகவே பெரும் பகுதி பணம் காலியாகிவிட்டது.
மிஞ்சிய பணத்தை வைத்துக்கொண்டு மனைவியுடன் அர்மன் குமார் ஜா, ரஷ்யா புறப்பட்டார். ரஷியாவில் இருவருக்கும் அரியா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் மீது மிகுந்த பாசம் கொண்ட அர்மன், மீதியிருந்த தொகையையும் தனது குடும்பத்தின் சந்தோஷத்திற்காக செலவு செய்தார்.
இந்தியாவில் பல ஆண்டுகள் நடித்து சம்பாதித்து சேர்த்து வைத்த பணம், ரஷ்யாவில் சில வாரங்களிலேயே செலவானது. அனைத்து பணமும் செலவான நிலையில் அவர்களது குடும்பம் வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டது.
ஏதாவது வேலைக்கு சென்று குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்று அர்மன் நினைத்தார். ஆனால், ரஷிய மொழி தெரியாததால் அவரை யாரும் வேலைக்கு சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால் அர்மன், நகரத்தில் இருந்து வெளியே வந்து குக்கிராமம் ஒன்றில் குடும்பத்துடன் வசிக்க சென்றார்.
அர்மனின் நிலையை நினைத்து வருந்திய உள்ளூர் டி.வி. சேனல் ஒன்று, வானிலை வாசிக்கும் வேலையை அவருக்கு வழங்கியது. ஆனால், ரஷிய மொழி சரளமாக தெரியாததால் அந்த வேலையிலும் அவரால் நிலைக்க முடியவில்லை. கடைசியில் குடும்ப வறுமையை சமாளிக்க, 2 டீக்கடை வாசல்களை பெருக்கி சுத்தம் செய்யும் வேலையை அர்மன் செய்து வருகிறார்.
தனது வறுமை நிலை குறித்து, கனத்த இதயத்தோடு பேசிய அர்மன், நான் நாடகத்தில் நடித்தபோது ஒரு நாளைக்கு ரூ.9 ஆயிரம் சம்பாதித்து விடுவேன். ஆனால், இங்கு ஒரு மாதம் தெரு பெருக்கினால்தான் அந்த தொகை கிடைக்கிறது. நடிகராக இருந்தபோது, ஒரு உடையை 2 முறை பயன்படுத்தி விட்டு, அப்படியே ஏழைகளுக்கு கொடுத்து விடுவேன். ஆனால், இன்றோ என்னுடைய செல்ல மகள் அரியா, 2-ம் தர துணிகளை உடுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாள். நாடகங்களில் எத்தனையோ பாத்திரங்களை ஏற்று நடித்த எனக்கு, வாழ்க்கையில் ஏழை என்ற கனமான பாத்திரத்தை ஏற்று நடிப்பது வருத்தமாக உள்ளது என்று கண்ணீர் மல்க கூறினார்.
ரஷிய வாழ்க்கை வேண்டாம் என்று இந்தியாவுக்கே திரும்பி விடலாம் என்று அர்மன் நினைத்தார். ஆனால், ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் ஆவணங்கள் அவரிடம் சரியாக இல்லாததால் மாஸ்கோ விமான நிலைய அதிகாரிகள், அர்மனை இந்தியாவுக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால், வறுமையிலேயே அர்மன், ரஷ்யாவிலேயே வாழ்ந்து வருகிறார்.
அவர்களது வாழ்க்கையில், பணம் வேண்டுமானால் தோற்று வறுமையில் தள்ளியிருக்கலாம். ஆனால் காதல் தோற்கவில்லை என்பதுதான் உண்மை.