விவாகரத்து வழக்கு செலவுக்காக, கணவருக்கு மனைவி பணம் கொடுக்க வேண்டும் என்று, சென்னை தம்பதிகள் தொடர்ந்த விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் விசித்திர உத்தரவை பிறப்பித்துள்ளது.
சென்னையில் வசித்து வருபவர் சந்தோஷ் கே.சாமி. அவருடைய மனைவி இனிஸ் மிராண்டா. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இனிஸ் மிராண்டா, தனது மகளுடன் பெங்களூரில் இருக்கிறார்.
இனிஸ் மிராண்டா, குடும்ப வன்முறை சட்டத்தின்படி தனது கணவருக்கு எதிராக பெங்களூர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருந்தார். அதைத் தொடர்ந்து, திருமண பந்தத்தில் இருந்து விலகிச்செல்லும் மனைவியை சேர்த்து வைக்கும்படி, சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் சந்தோஷ் சாமி மற்றொரு வழக்கு தொடர்ந்தார்.
சென்னை நீதிமன்றத்தில் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை பெங்களூர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி, இனிஸ் மிராண்டா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி தல்வீர் பண்டாரி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இனிஸ் மிராண்டா தொடர்ந்துள்ள விவகாரத்து வழக்கு செலவுக்காக, அவருடைய கணவர் சாமிக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். சாமி வேலை இல்லாமல் இருப்பதை கருத்தில் கொண்டு, வழக்கமான விதிமுறைக்கு மாறாக இந்த உத்தரவை பிறப்பித்து இனிஸ் மிராண்டாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.வழக்கமாக விவாகரத்து வழக்குகளில், குற்ற நடைமுறை சட்டம் 125-வது பிரிவின் கீழ், வழக்கு முடியும் வரை அவருடைய கணவர்தான் மனைவிக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.