காதல் என்பது, இருவரது மனதும் புரிந்து கொண்டு, ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொண்டு, அவருடன் வாழ்ந்தால் நமது வாழ்க்கை சிறப்பாக இருக்கும், அவர் இல்லாமல் நமது வாழ்க்கை இல்லை என்று உணர்வது. ஆனால் இப்போது நாம் ஆங்காங்கே பார்க்கும் இளம் ஜோடிகளைப் பார்த்தால் இந்த உணர்வுகளை அவர்கள் உணர்ந்திருப்பார்களா என்ற சந்தேகமேத் தோன்றும்.
வாழ்க்கையைப் பற்றிய எந்த தெளிவான கருத்தும் இல்லாமல், ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு புரிந்து கொள்ளாமல், தன் பின்னால் சுற்றிய ஒரேக் காரணத்திற்காக ஒரு ஆணின் காதலை ஏற்றுக் கொள்ளும் எத்தனையோ பெண்கள் உள்ளனர். பார்க்க பளிச்சென்று இருப்பதாலும், தனது நண்பர்கள் முன்னால் அவள் என் காதலி என்று சொல்லிக் கொள்ள பெருமையாக இருக்கும் என்பதாலும், ஒரு பெண்ணை துரத்தி துரத்திக் காதலிக்கும் ஆண்களும் எத்தனையோ...
ரயில் நிலையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலோ இது போன்று மிகச் சிறிய வயதில் காதல் கொண்டிருக்கும் காதல் ஜோடிகளைப் பார்ப்பவர்கள் முகம் சுளிப்பது மட்டும் உண்மை. அந்த வயதில் தங்களுக்கு பிள்ளைகள் இருந்தால் ஒரு நிமிடம் அவர்களை நினைத்துப் பார்க்கும் பெற்றோர்களும் ஏராளம். நம்ம பிள்ளை இப்படி இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் பெற்றவர்களை விட, நம்ம பிள்ளை எங்க சுத்திக்கிட்டிருக்கோ என்று ஏக்க பெருமூச்சு விடும் பெற்றவர்களே அதிகமாக உள்ளனர்.
பள்ளிப் படிப்பின் போதே ஆரம்பிக்கும் இவர்கள் காதல், கல்யாணப் பரிட்சை வரைக் கூட செல்வதில்லை. காதல் எனும் வகுப்பில் சேரவே தகுதியில்லாத இந்த காதலர்கள், கல்யாணப் பரிட்சையை எப்படி எழுதுவார்கள். அப்படியே எழுதினாலும் அதில் இவர்கள் தேர்ச்சி பெற முடியுமா?
தனது பிள்ளைகளுக்கு கல்வியறிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக்கு அனுப்பி, பள்ளியில் மாணவர்களுடன் எந்த வகையிலும் நமது பிள்ளை தரம் தாழ்ந்து விடக் கூடாது என்பதற்காக உடை முதல் செருப்பு வரை பார்த்து பார்த்து வாங்கித் தரும் பெற்றோர், அவர்கள் பிள்ளை ரயில் நிலையத்தில் ஒரு பையனுடன் கொஞ்சி கொஞ்சிப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டால் எப்படி இருக்கும்...
மேலும், செல்பேசிகள் இல்லாத கரங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லோர் கையிலும் செல்பேசி உள்ளது. கல்லூரி மாணவர் மட்டுமல்லாமல், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடமும் தற்போது அதிக அளவில் செல்பேசிகள் உள்ளன. இது போதாதென்று பள்ளி மாணவர்களுக்கு இலவச சிம் கார்டுகளை டாக் வேல்யூவுடன் அளிக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஏராளம்.
இந்த நவீன யுகத்தில் ஒரு பெண் தலை குனிந்து நடக்கிறாள் என்றால் அதற்கு என்ன காரணம் என்று கேட்டால்... அவள் மொபைலில் எஸ்.எம்.எஸ். ப்ரீ என்று அர்த்தம் என்கிறது புதிய பழமொழி.
இவர்கள் காதல் என்று சொல்வது உண்மையில் காதலே அல்ல.. வெறும் இனக்கவர்ச்சி. தன்னிடம் சிரித்துப் பேசும், ஆணை/பெண்ணை தான் காதலிப்பதும், அவர்களும் தன்னை காதலிக்கிறார்கள் என்று எண்ணி படிப்பில் கவனம் செலுத்தாமல் வாழ்க்கையை வீணடிக்கும் மாணவர்கள் எத்தனையோ பேர்.
ரயில் நிலையத்திலும், பேருந்திலும் பார்த்து காதலித்து வாழ்க்கையை வீணடிக்காமல், வாழ்க்கைக்குத் தேவையான கல்வி, திறமை, வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டு, கல்யாண வயதில், தனக்கு ஏற்றவர் இவர் என்பதை உணர்ந்து கொள்ளும் காதலே நீடிக்கும். நிலைக்கும்.
அதை விட்டுவிட்டு டியூஷன் சென்டரிலும், டெலிபோன் பூத் வாசலிலும் கால் கடுக்க நின்று கொண்டிருந்தாலே அவர் தனது வாழ்க்கைக்கு ஏற்றவர் என்று எண்ணும் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் பிள்ளைகள். பிள்ளைகள் ஏமாற்றுவது பெற்றவர்களை அல்ல.. தங்களது வாழ்க்கையை.
வாழ்க்கையில் தடம்புரள எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் வாழ்க்கையில் ஏற்றம் பெற ஒரு சில வழிகளே உள்ளன. எனவே காதல் எனும் தவறான பாதையில் என்று பாதாளத்தில் வீழ்வதை விட, கல்வி, திறமை எனும் சரியான பாதையில் சென்று சிகரத்தை எட்டுவதே நல்லது.