ஒருவருக்கு 60ஆவது பிறந்த நாள் வரும் போது, அவருக்கு 60ஆம் கல்யாணம் செய்து வைக்கிறார்கள் அவர்களது பிள்ளைகள். பெற்றவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது போக, பிள்ளைகள் பெற்றவர்களுக்கு செய்வதுதான் 60ஆம் கல்யாணத்தின் சிறப்பாகும்.
ஆனால் பலருக்கும் 60ஆம் பிறந்த நாள் மட்டும் அவ்வளவு சிறப்பு ஏன், அந்த ஆண்டில் மட்டும் மீண்டும் திருமணம் அதாவது 60ஆம் கல்யாணம் செய்து வைப்பது எதற்கு என்று தெரிவதில்லை.
அதாவது இதற்கு ஆன்மீக அர்த்தம் உள்ளது என்பதை முதலில் அறிய வேண்டும்.
ஒருவருக்கு 60 வயது முடிந்து, 61-வது வயது தொடங்கும் ஜென்ம நட்சத்திர நாளன்று, அவர் பிறந்தபோது ஜாதகத்தில் நவகிரகங்கள் எந்த நிலையில் இருந்தனவோ அதே இடத்தில் மறுபடியும் அமைந்திருக்கும்.
அப்போது ஆயுளில் ஒரு பாகம் முடிந்து மறு பாகம் ஆரம்பிக்கிறது என்று பொருள். அன்று முதல் அவர் புதுப்பிறவி எடுப்பதாக கருதலாம். ஒரு ஆயுளை அவர் முடித்துவிட்டார் என்றும் கருதலாம். அதனால்தான், அப்போது திரும்பவும் திருமணம் செய்து வைப்பார்கள். இதை 60-ம் கல்யாணம் என்றும், சஷ்டியப்தபூர்த்தி என்றும் அழைக்கிறார்கள்.
இனி யாராவது.. உனக்கு திருமணமே நடக்கவில்லையா? நேரா 60ஆம் கல்யாணம்தான் என்று சொன்னால்.. அப்போது குறுக்கிட்டு 60ஆம் கல்யாணத்தின் அர்த்தம் என்ன என்பதை விளக்கிக் கூறுங்கள்.