குடும்பத்தில் கணவன் - மனைவிக்கு இடையேயான ஏற்படும் குடும்பப் பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்க்கும் விதத்தில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் குடும்பநல மையம் தொடங்கப்பட்டு உள்ளது.
பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காவல்துறை ஆணையரை சந்திக்க மக்களுக்கு வாய்ப்புகள் தரப்படுகிறது. அப்போது அவரிடம் கொண்டு வரப்படும் பல பிரச்சினைகள், குடும்ப சண்டைகளை அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளன. எனவே அப்படிப்பட்ட புகார்களுக்கு தீர்வு காண, சமூக நல வாரியத்தின் குடும்பநல ஆலோசனை மையத்தை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நேற்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் குடும்ப நல மையத்தைன ஆணையர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
பிறகு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை ஆணையர், தினமும் 40 முதல் 60 மனுதாரர்களை நான் சந்திக்கிறேன். அவர்களில் பெரும்பாலானவை, காதல் தகராறு, திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றுவது, கணவன்-மனைவி இடையேயான சண்டைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதை சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக அணுகாமல் சமுதாயப் பிரச்சினையாக அணுக முடிவு செய்தோம்.
எனவே சமூகநல வாரியத்தின் மூலம் இங்கு வரும் மனுதாரரின் குடும்பப் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடிவு செய்தோம். அதன்படி இந்த மையத்தை துவக்கியுள்ளோம். காவல்துறைக்கு வரும் புகார்களில் குடும்பப் பிரச்சினைகளை பின்னணியாகக் கொண்ட பிரச்சினைகளை இந்த மையத்துக்கு அனுப்பி வைப்போம். அங்கு சம்பந்தப்பட்ட கணவன்-மனைவி, உறவினர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். இதில் குடும்பத்தினர் ஒன்றுபட்டு சமாதானமாகப் போனால் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும்.
அவ்வாறு ஒத்துப்போகவில்லை என்றால், அந்த மனு மீண்டும் காவல்துறைக்கே அனுப்பி வைக்கப்படும். பின்னர் தேவைக்கு ஏற்ப மனு மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜேந்திரன் கூறினார்.