பொதுவாக காதல் திருமணங்கள்தான் அதிகமாக பிரிவினை சந்திக்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணத்தில் அவசரக் கல்யாணம் முதலில் நிற்கிறது.
காதலைச் சொல்லி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, தங்களது வருங்காலத்தைப் பற்றி சரியாக திட்டமிட்டு, வீட்டில் பெரியவர்களின் அனுமதியோடு நடக்கும் திருமணங்களை விட, அவசர அவசரமாக தங்களது திருமணங்களை நடத்திக் கொள்ளும் காதலர்கள் விரைவில் நீதிமன்றத்தை சந்திக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
காதலர்கள் தங்களது காதலைச் சொல்ல வேண்டுமானால் அவசரம் காட்டலாம். அதில் தவறில்லை. ஆனால் கல்யாணம் செய்து கொள்ள அவசரப்படவேக் கூடாது. நிதானமாக தங்களது நிலைகளை ஒருவருக்கொருவர் புரிய வைக்க வேண்டும். தங்களது வருங்காலத்தைப் பற்றித் தெளிவாக பேசி ஒருமித்தக் கருத்தை கொண்டு வர வேண்டும்.
வீட்டில் பெரியவர்களிடம் உங்களது காதலைப் பற்றி சொல்லி அவர்களிடம் அனுமதி பெற முயற்சிக்க வேண்டும். சில காலம் பொறுத்திருந்து அவர்களது மனதில் இடம்பிடிக்கவும், உங்களது காதல் மீதான உறுதியை காட்டவும் அவகாசம் அளிக்க வேண்டும்.
பிறகும் அவர்களது எதிர்ப்பு அதிகரித்தால், அப்போது வீட்டை விட்டு வெளியேறுவதோ, சுயமாக திருமணம் செய்து கொள்வதோ தவறில்லை.ஆனால், வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படும் பொழுது அதிலிருந்து தப்பிப்பதற்காக சரியான திட்டமிடல் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் முடித்துக் கொள்வது தவறான முடிவாகும்.
இதனால் காதலர்கள் இருவருமே வேலை வாய்ப்பு, கல்வி போன்றவற்றை திட்டமிட்டபடி அடைய முடியாமல் கிடைத்ததைக் கொண்டு வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.ஓரளவிற்கு வசதியான குடும்பத்தில் இருந்து வந்த ஆணோ, பெண்ணோ, திடீரென தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை திருமணமான புதிதில் வேண்டுமானால் தாக்குப்பிடிக்கப் பார்ப்பார்கள். ஆனால் அதையே வாழ்நாள் முழுவதும் சகித்துக் கொள்ள முடியாதவர்களாக ஒரு காலக்கட்டத்தில் திருமணத்தையே வெறுப்பார்கள். அடுத்ததாக தாம் விரும்பி ஏற்றுக் கொண்ட தனது வாழ்க்கைத் துணையின் மீது தங்களது கோபம் திரும்பும்.மேலும், அவசரக் கல்யாணத்தினால் இருவருமே தங்களது பெற்றோர், உறவினர்களின் ஆதரவினை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் மனவியல் அடிப்படையிலும் தங்களுக்கு யாருமில்லை என்ற பயத்தை ஏற்படுத்தியிருக்கும்.
ஒருவேளை இருவரும் நல்ல முறையில் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கும் பட்சத்தில் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். ஆனால் ஒருவர், வெறும் காமத்திற்காகவோ, பணம் அல்லது வேறு ஒரு தேவைக்காக ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில், அந்த பெண்ணின் அல்லது ஆணின் நிலை என்னவாக இருக்கும். நம்பி வந்த இடமும் மோசம் போய், பெற்றவர்களும் நம்மை மீண்டும் சேர்த்துக் கொள்ளாத நிலையில் அனாதை நிலைக்கு அல்லவா தள்ளப்படுவார்கள்.எனவே, யாராக இருந்தாலும், காதலை நல்ல முறையில் கொண்டு செல்ல தெளிவான சிந்தனையும், முடிவும் அவசியம். அவசரத் திருமணம் அவஸ்தையில் முடியலாம். எச்சரிக்கை உணர்வோடு செயல்படுங்கள்.