பொதுவாக திருமணமாகி ஒரு சில ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு, கருத்து வேறுபாட்டின் காரணமாக நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்குத் தொடர்வார்கள். தற்போது இது சகஜமாகிவிட்டது.
ஆனால் இங்கே நாம் கூறவிருக்கும் ஒரு விவாகரத்து வழக்கு வினோதமாக உள்ளது.
அதாவது, மும்பையைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி தனது 80 வயது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளதுதான் அந்த ஆச்சரியத்திற்குக் காரணம்.
மும்பை பைகுல்லாவைச் சேர்ந்த இத்தம்பதியினர் 40 ஆண்டுகால திருமண வாழ்க்கையை(?) ஒன்றாக கழித்திருக்கிறார்கள். ஆனால் இப்போது அந்த மூதாட்டி, விவகாரத்து கேட்டுள்ளார். இனியும் இவர் செய்யும் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு ஒன்றாக வாழ முடியாது என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல ஜீவனாம்சமாகவும் பெருந்தொகை ஒன்றையும் கேட்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை அளிக்கிறார் அந்த மூதாட்டி.
கடந்த 2007-ம் ஆண்டு விவாகரத்துக்காக விண்ணப்பித்தபோது ஜீவனாம்சமாக 45 லட்சம் கேட்டிருந்த மூதாட்டி, தற்போது அதை 2 கோடி ரூபாயாக உயர்த்திவிட்டார். அதற்கும் சரியான காரணம் ஒன்றை கூறுகிறார். அதாவது, தனது கணவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், தற்போதும் ஓய்வூதியமாக மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் பெறுவதாகவும், அவர் செய்துள்ள முதலீடுகள், சொத்துகள் எல்லாம் சேர்த்து 7 கோடி ரூபாய்க்கு மேல் தேறும் என்றும், அதனாலேயே தான் ஜீவனாம்சத் தொகையை மறு திருத்தம் செய்ததாகவும் கூறுகிறார்.
கணவர் மீது கூறும் குற்றச்சாட்டுகளின் பட்டியலோ நீள்கிறது, அதாவது, உயர்சம்பளத்தில் வேலை பார்த்த தனது கணவர் தனக்கு மாதந்தோறும் வீட்டுச் செலவுக்கு 500 ரூபாய் மட்டுமே கொடுத்து, அதிலும் மிச்சம் பிடிக்க சொல்லியிருக்கிறார்.
வருடத்தில் 9 மாதங்களாவது எனது கணவர் வீட்டை விட்டு வெளியே இருப்பார். அவ்வேளைகளில் நான் கடும் கஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
வீட்டில் எல்லா வேலைகளையும் நானே செய்வேன். மாமியார் கூறும் அர்த்தமற்ற சடங்குகள், சம்பிரதாயங்களையும் செய்ய வேண்டும்.
இவை குறித்தெல்லாம் நான் யாரிடமும் புகார் கூறக்கூட முடியாது. எனக்குத் தனிமையோ, கலந்துரையாடுவதற்கான வாய்ப்போ இருந்ததில்லை என்று புலம்புகிறார்.
நாங்கள் இன்னும் கணவன்- மனைவியாக இருந்தாலும் பல ஆண்டுகளுக்கு முன்பே எங்களின் உறவு சீர்கெட்டு விட்டது என்று குமுறுகிறார் அந்த மூதாட்டி.
அக்கம்பக்கத்து வீட்டினர், நண்பர்கள், உறவினர்கள் எல்லோருடனும் நன்றாக சிரித்துப் பேசும் அவர், வீட்டில் என்னிடமும் குழந்தைகளிடமும் மோசமாகவே நடந்து கொள்வார்.
எப்போதும் என்னை அடிப்பது வழக்கம். இன்றும் கண்மண் தெரியாமல் அடித்து வருகிறார். எங்கள் பிள்ளைகளையும் அடித்து விலக்கியே வைத்திருந்தார். அவர்களை மோசமாக சபிக்கவும் செய்வார் என்கிறார் அவர்.
பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துள்ள குடும்பநல நீதிமன்றத்தில், இந்த வழக்கு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.