தன்னுடன் தனிக்குடித்தனம் வர மறுத்த தனது காதல் கணவனை சிறைக்குள் தள்ளிய காதல் மனைவியின் காதல் கதை இது.
சென்னை மாம்பலம் முத்துரங்கன் தெருவைச் சேர்ந்தவ குணா, பத்மபிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள்தான் ஆகின்றன.
குணா தனது சித்தப்பா மற்றும் சித்தியுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார். ஆனால் கூட்டுக் குடித்தனத்தில் விருப்பம் இல்லாத பத்மபிரியா, அவரை தனிக்குடித்தனத்திற்கு வற்புறுத்தியுள்ளார்.
இந்த பிரச்சினை காதல் தம்பதிகளுக்கு இடையே பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், காவல்நிலையத்திற்குச் சென்ற பத்மபிரியா, தனது கணவன் மீது வரதட்சணைப் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, குணாவையும், பத்மபிரியாவையும் அழைத்து கலந்துரையாடிய காவல்துறையினர், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று ஆலோசனை வழங்கினர்.
தனிக் குடித்தனம் வர குணாவும் சம்மதிக்கவில்லை. கூட்டுக் குடித்தனத்திற்கு பத்மபிரியாவும் ஒத்துக் கொள்ளவில்லை. தன்னோடு தனிக் குடித்தனம் நடத்த தயாராக இருந்தால் வரட்டும். இல்லை என்றால் குணா மீது வரதட்சணைப் புகார் பதிவு செய்து கைது செய்யும்படி பத்மபிரியா உறுதியாகக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குணா மீது வரதட்சணைப் புகார் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
காதலித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகள், இன்று ஒரு சிறுப் பிரச்சினைக்காக காவல்நிலையம் வரை வந்துள்ளது ஒட்டுமொத்த பெண்களின் சமூகத்தையே கேலிக்குறியதாக்கியுள்ளது.
வீட்டில் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகும் பெண்களைக் காக்கவே வரதட்சணை தடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்றோ பல பெண்கள், தங்களது சுயநலத்திற்காக அந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
வரதட்சணைப் தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் இதுபோன்ற பெண்கள் கடைசியில் தொலைத்துவிட்டு தேடுவது இவர்களது வாழ்க்கையைத்தான் என்பதை எப்போது அறிவார்கள்.