எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திருமணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கான வழிமுறைகளை அந்தந்த மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்று கடந்த 2006ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவு பல மாநிலங்களில் அமல்படுத்தப்படவில்லை என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தொடர்பாக மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது.
இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் அரிஜித் பசாயத், பி. சதாசிவம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் நேற்று வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில், திருமணப் பதிவை கட்டாயமாக்கும் சட்டத்தை அமல்படுத்த கால அவகாசம் வேண்டும் என்று கூறப்பட்டது.
இதேப்போன்று ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது.
அனைத்தையும் கேட்டறிந்த நீதிபதிகள், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திருமணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இதற்கான சட்டத்தை மாநில அரசுகள் உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.