பல இல்லங்களில் தாம்பத்யம் என்பது ஒரு இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
விவாகரத்து பெற்று தாய் வீட்டிற்குச் சென்றால் சமுதாயம் என்ன சொல்லும் என்று பயந்தும், தாய் வீட்டில் சரியான ஆதரவு இல்லாததாலும், தனது குழந்தைக்காகவும் பல பெண்கள் கணவனுடன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.இவை மாற வேண்டுமானால் ஆண்கள் கொஞ்சம் கீழிறங்கி வந்து பெண்களிடம் மனம்விட்டுப் பேச வேண்டும். ஒருவருக்கொருவர் என்ன மனக்குறைகள் என்பதை தெரிவிக்க வேண்டும்.அப்படி ஒருவருக்கொருவர் தங்களது மனக்குறைகளைக் கூறும்போது அதனை மறுக்கவோ, தட்டிக் கழிக்கவோ செய்யாமல், அந்த குறையை எப்படி நிவர்த்தி செய்வது என்பதை பற்றி சிந்தியுங்கள்.ஒரு வீட்டில் இரு துருவங்களாக வாழும் கணவன் மனைவியால் அவர்களது குழந்தைகள்தான் அதிகம் ஏங்கிப் போவார்கள்.ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொருவர் பிரச்சினைக்கு காரணமாக இருப்பார்கள். சில வீடுகளில் கணவன், சில வீடுகளில் மனைவி, பல வீடுகளில் மாமியார், நாத்தனார், மாமனார் என்று இந்த பட்டியல் நீளும்.கணவன் - மனைவி என்பவர்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்காவிட்டாலும், ஒருவரது கருத்தை ஒருவர் மதிக்க வேண்டும் என்பது இயல்பான கொள்கையாக இருக்க வேண்டும்.
சண்டைப்போடலாம். ஆனால் சண்டையின் முடிவில் சமாதானமும் இருக்க வேண்டும். சண்டைப் போட்டவுடனே சமாதானம் ஆக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால் சண்டை போட்டு அந்த மனநிலை மாறியப்பிறகு அந்த விஷயம் பற்றி இருவரும் அமைதியாகப் பேசி தங்களது நிலைகளை விளக்கி அந்த சம்பவம் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு இருவரும் வர வேண்டும்இல்லை என்றால், அந்த சம்பவம் பற்றி அடிக்கடிப் பேசி சண்டை தலைதூக்கும் நிலை ஏற்படும்.கணவன் - மனைவி இருவருக்குள்ளும் எந்த மனக்கசப்பும் நீண்ட நாளைக்கு நிலைத்துவிடக் கூடாது. அப்போதைக்கு அப்போதே சில விஷயங்களை மறந்துவிடுவதுதான் தாம்பத்தியத்திற்கு நல்லது.பழிவாங்கல்களும், படையெடுப்புகளும் போருக்கு வேண்டுமானால் வெற்றியைத் தரலாம். தாம்பத்தியத்திற்கு அது முற்றுப்புள்ளியாகவே இருந்துவிடும்.கவனம் வேண்டும்.