Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலர் தினமும் இந்தியர் கண்ணோட்டமும்

காதலர் தினமும் இந்தியர் கண்ணோட்டமும்
, புதன், 12 பிப்ரவரி 2014 (18:04 IST)
பிப்ரவரி 14 ஆம் தேதி, இந்த நாளுக்கு மேற்கொண்டு அறிமுகம் தேவையில்லை. காதலர்களுக்காகப் போராடிய வாலண்டைன் என்ற பாதிரியார் மறைந்த நாள் இது. காலத்தால் அழியாத காவியங்களைக் காதலர்களால் மட்டுமே படைக்க முடியும். அத்தகையவர்கள் காதலர் தினத்தை விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.
FILE

ஆனால் இந்த நாள், மேற்கத்திய நாகரிகத்தின் அடையாளம் என்று சிலரால் விமர்சனம் செய்யப்படுகிறது. இன்னும் சிலரால் இந்திய பாரம்பரியம் என்பது பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்கள்தான் என்றும் சொல்லப்படுகிறது. காதல் என்பதே ‘காலம் கெட்டுப் போனதன் விளைவு’ என்று கூட சொல்லப்படுகிறது.

ஆனால், இந்திய வரலாற்றில் எப்போதுமே காதலுக்குச் சிறப்பான இடம் உண்டு. அது காலம் காலமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப் போனால், காதலர்கள் பல ஆண்டுகளாகவே இங்கே கொண்டாடி வருகிறார்கள்.

இந்து திருமணங்களில் எட்டு வகைகள் உண்டு. அதில் ராக்ஷச திருமணம் என்றும், கந்தர்வ திருமணம் என்றும் திருமண வகைகள் உண்டு. இதில், ராக்ஷச திருமணம் என்றால் ஓடி போய் திருமணம் செய்வது. கந்தர்வ திருமணம் என்றால் வெறும் காமத்துக்காக திருமணம் செய்து கொள்வது. இன்றைய ‘சேர்ந்து வாழும் கலாச்சாரத்தையும்’ கந்தர்வ விவாகத்தில் சேர்த்துக்கொள்ளலாம். இவை அனைத்தும் சாத்திரத்தின் படி அங்கீகரிக்கப்பட்டவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

கிருஷ்ணர் ராதையைத் திருமணம் செய்தது ராக்ஷச திருமண முறையில்தான். முருகன் வள்ளியைக் கரம் பிடித்ததும் காதல் புரிந்துதான். தம்பியின் காதலுக்கு முழுமுதற் கடவுளான விநாயகர் உதவவும் செய்தார். ஏன், சிவனும், பார்வதியும் கூட காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தவர்கள்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. தவிர, இறைவனையே காதலனாகவும், கணவனாகவும் நினைக்கும் பக்தி இலக்கியங்கள் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன.
webdunia
FILE

தமிழகத்தில் இந்துக்கள் கொண்டாடும் இரண்டு பண்டிகைகள் அல்லது விழாக்கள், காதலர்களுக்கே உரியது. அவை இரண்டும் வீடுகளில் கொண்டாடப்படுவதில்லை. கோயில் உத்சவங்கள் என்ற பெயரில் சமுதாய விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. அவை பங்குனி உத்தரமும், வசந்த உத்சவமும்.

பங்குனி உத்தரம் என்றாலே சிவன் ஆலயங்களிலும் முருகன் ஆலயங்களிலும் வள்ளி - முருகன் திருகல்யாண உத்சவங்களும், விஷ்ணு ஆலயங்களில் சீதா - ராமர் திருகல்யாண உத்சவங்களும் நடைபெறுவது வழக்கம். இவை இரண்டும் மனம் இணைந்து, காதலித்து ஒன்று சேர்ந்த தம்பதிகளைக் கொண்டாடும் தன்மையே.

அடுத்து, வசந்த உத்சவம். சித்திரை மாத பௌர்ணமி முடிய 10 நாட்கள் நடைபெறும் இந்த உத்சவம் சிவன் ஆலயங்களில் அனுசரிக்கப்படுகிறது. பத்தாவது நாள் மன்மத தகனம் என்ற பெயரில் மன்மதனை சிவன் எரிப்பதும், பின்பு அவனை உயிர்த்தெழ வைப்பதுமாக கோலாகமாகக் கொண்டாடப்படும் இந்த உத்சவம் உண்மையில் இளைஞர்களுக்கானது. பத்து நாட்களும் இந்த உத்சவத்தில் கலந்துகொள்ளும் இளைஞர்கள், யுவதிகளுக்கு காதல் வலை வீசுவது ஆலயங்களில் பல ஆண்டுகளாக நடைபெறும் கண்கொள்ளா காட்சிகள். காதலுக்காக ஒரு நாள் அல்ல, பத்து நாட்களைத் தந்தவர்கள் நாம்.

தெய்வீக காதல் மட்டுமல்ல. மகாபாரதத்தில் வரும் அர்ச்சுனன் - சுபத்திரை காதல், அவர்களது மகன் அபிமன்யு - துரியோதனன் மகள் உத்திரை காதல் ஆகியவை முதல் அம்பிகாபதி - அமராவதி காதல், நளன் - தமயந்தி காதல், அரிச்சந்திரன் - சத்தியவதி காதல், சென்ற நூற்றாண்டில் மகாத்மா காந்தியின் மகன் தேவதாஸ் காந்திக்கும், ராஜாஜியின் மகள் லட்சுமிக்கும் ஏற்பட்ட காதல் வரை ஏராளமான உதாரணங்கள் நமது இந்திய வரலாறு முழுக்கவே உண்டு.

இவையெல்லாம் பல ஆண்டுகளாக இந்திய பாரம்பரியம் காதலர்களைப் புறக்கணிக்காமல் அவர்களை நாயகர் - நாயகிகளாக்கிய பெருமைகளை நமக்கு உணர்த்துகின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil