மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்றே முடிவெடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னத்தை வசப்படுத்த 6 மாநிலங்களில் களமிறங்க இருக்கிறது. தெலங்கானாவில் 10, கர்நாடகாவில் 6, கேரளாவில் 5, மகாராஷ்ராவில் 1 மக்களவை தொகுதிகளில் விசிக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திருமாவளவன் சிதம்பரம் (தனி) தொகுதியிலும், ரவிக்குமார் விழுப்புரம் (தனி) தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு திமுக கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
மக்களவை தேர்தலில் தங்கள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கக் கோரி விசிக சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்குவதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரியது விசிக. இதனை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்தியது. பானை சின்னம் ஒதுக்குவது பற்றி தேர்தல் ஆணையம் இன்றே முடிவெடுக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.