விருதுநகர் தொகுதியில் போட்டிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் ஓட்டலில் பரோட்டா சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளராக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கடந்த 3 நாட்களாக சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தெரு, தெருவாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில் தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிவகாசி திருத்தங்கல் ரோட்டில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்தனர்.
அப்போது அங்கிருந்து ஓட்டலுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந் திரபாலாஜி ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த பொதுமக்களிடம் விஜயபிரபாகரனை அறிமுகம் செய்து வைத்து அவருக்கு கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஓட்டலில் புரோட்டா மாஸ்டரிடமும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் விஜயபிரபாகரன் இருவரும் வாக்கு கேட்டனர். அப்போது நிச்சயம் உங்களுக்கு வாக்கு அளிக்கிறேன் என்று புரோட்டா மாஸ்டர் கூறினார். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியும், வேட்பாளர் விஜயபிரபாகரனும் புரோட்டா தயார் செய்ய தொடங்கினர். சிறிது நேரத்தில் புரோட்டா தயார் ஆனது. உடனே இருவரும் ஒரே வாழை இலையில் சில புரோட்டோக்கைளை வைத்து சாப்பிட்டனர்.
முன்னாள் அமைச்சர் புரோட்டா சுடுகிறார் என்ற தகவல் பரவிய நிலையில் அந்த பகுதியில் அதிகளவில் மக்கள் கூட்டம் கூடியது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.