அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பாரபட்சம் இன்றி அனைவருக்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதற்கட்ட தேர்தல் வருகிற 19ஆம் தேதி தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து அடிக்கடி பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 2014 ஆம் ஆண்டு நம்பிக்கையையும், 2019 ஆம் ஆண்டு உறுதியான உணர்வையும் மக்களிடையே கொண்டு வந்தேன் என தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு உத்திரவாதத்தை கொண்டு வருவேன் எனவும் இது மோடியின் கேரண்டி எனவும் தெரிவித்தார். மேலும் 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை பத்தாண்டுகளில் செய்து முடித்தேன் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற மந்திரத்தை பின்பற்றும் கட்சி பாஜக என்றும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பாரபட்சம் இன்றி அனைவருக்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.