தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் விருதுநகர் தொகுதியில் கேப்டனின் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேமுதிகவுக்கு வழங்கப்படும் என்று அதிமுக உறுதி அளித்துள்ளதாக பிரேமலதா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேமுதிக போட்டியிடும் ஐந்து தொகுதிகளில் வேட்பாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மத்திய சென்னை தொகுதியில் பார்த்தசாரதி, திருவள்ளூர் (தனி) நல்லதம்பி, கடலூர் தொகுதியில் சிவக்கொழுந்து, தஞ்சாவூர் தொகுதியில் சிவனேசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
விருதுநகர் தொகுதியில் கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய் பிரபாகரன் களம் இறக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் பிரேமலதாவும், அவரது சகோதரர் எல்கே சுதிஷும் போட்டியிடவில்லை.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அக்கட்சியினருக்கு ஆதரவு வாக்கு அதிகம் கிடைக்கும் என்பதாலும், விஜயகாந்த்தின் சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள் வருவதாலும், விருதுநகர் தொகுதியை தேமுதிக தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர், அமமுக வேட்பாளர் பரமசிவ அய்யப்பன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருள்மொழிதேவன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனியசாமி உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் 4,70,883 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் வெற்றி பெற்றார். அவரை அடுத்து 3,16,329 வாக்குகள் பெற்று தேமுதிக வேட்பார் அழகர்சாமி 2-ம் இடத்தைப் பெற்றார்.
இந்நிலையில், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் இம்முறை அதிமுகவுடன் கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரனை களமிறக்கினால் உறுதியாக வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் அவரை வேட்பாளராக தேமுதிக அறிவித்துள்ளது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதால், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக உள்ளது குறிப்பிடத்தக்கது.