விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இந்துக்களின் மிகப்பெரிய விரோதி மோடிதான் என பிரச்சாரத்தின் போது கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. இரண்டு தொகுதிகளிலும் அக்கட்சியின் தலைவர் திருமா வளவன் மற்றும் பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர்.
விழுப்புரம் தொகுதியில் பிரச்சாரத்துக்காக முகாமிட்டுள்ள திருமாவளவன் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது ‘பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசமைப்பு சட்டம், சமூக நல்லிணக்கம், ஜனநாயகம் ஆகியவற்றுக்கு பெரும் ஆபத்து ஏற்படும். பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது இந்து வணிகர்கள்தான். மோடியும் பாஜகவும்தான் இந்துக்களின் மிகப்பெரிய விரோதிகள். பாஜகவும் மோடியும் தொடர்ந்து கார்ப்பரேட்களின் வளர்ச்சிக்காகவே செயல்பட்டு சிறு குறு வணிகங்களை அழித்து வருகின்றன.
நடைபெற இருக்கும் தேர்தல் சாதாரணமான தேர்தல் அல்ல. மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் தேர்தல். எனவே மக்கள் சிந்தித்து மதசார்பற்றக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்’ எனப் பேசியுள்ளார்.