தேர்தல் விதிமுறைகளை மீறிய முதல்வர் – திருமாவளவன் கண்டனம் !

சனி, 23 மார்ச் 2019 (08:39 IST)
நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் விதிமுறைகளை மீறி ராணுவ வீரர்களைக் குறிப்பிட்டு பேசியது சர்ச்சைகளை எழுப்பியது.

அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பரபரப்பாக வேட்பாளர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டங்களை நடத்தி வருகிறது. அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று சேலம் மாவட்டம் கருமந்துரையில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். சேலம் பகுதி பொது மக்களைச் சந்தித்து, பிரச்சார வேனிலிருந்தபடி பொதுமக்களிடம் உறையாற்றினார். மேலும் நேற்று கள்ளக்குறிச்சி வேட்பாளர் எல் கே சுதீஷை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தார்.

அந்த பிரச்சாரத்தின் போது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியைக் கடுமையாக விமர்சித்த அவர் ‘நாட்டின் பாதுகாப்பை மோடியால்தான் உறுதிப்படுத்த முடியும். பாகிஸ்தானில் சிக்கிய விமானப்படை வீரர் தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தனை பாதுகாப்பாக மீட்ட பெருமை பிரதமர் மோடியைச் சாரும்’ எனக் கூறினார்.  தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் விளம்பரங்கள் ஆகியவற்றில் அரசியல் கட்சிகள் ராணுவ தலைமை வீரர்களின் படங்கள் மற்றும் ராணுவ விழாக்களின் படங்கள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என்றும் ராணுவத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் தேர்தல் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து முதல்வர் விதிமுறைகளை மீறி வெற்றிக்காக ராணுவ வீரர் அபிநந்தனின் பெயரை உபயோகப்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ‘முதல்வருக்கு விதிமுறைகள் தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால் இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல். தேர்தல் ஆணையம் இதனை எவ்வாறு அணுகப் போகிறது என்பதைப் பார்ப்போம். விதிமுறைகளை மீறிப் பேசியதற்காக முதல்வர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நள்ளிரவில் வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல். யாராருக்கு எந்தெந்த தொகுதி? விவரம் உள்ளே!!