Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செம்மொழி மாநாட்டில் எதிர்பார்ப்பது என்ன? கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது.

செம்மொழி மாநாட்டில் எதிர்பார்ப்பது என்ன? கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது.
, திங்கள், 14 ஜூன் 2010 (20:30 IST)
FILE
கோவையில் தமிழக அரசு நடத்தவுள்ள செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், ஆய்விற்கும் என்ன செய்யப்பட வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பை ஒரு கொள்கை அறிக்கையாக தமிழ் நேயம் நடத்திய கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.

கோவை அண்ணாமலை மன்றத்தில் ஞாயிற்றுக் கிழமையன்று தமிழ் விழா இலக்கியக் கருத்தரங்கு நடைபெற்றது. எழுத்தாளர் சூரிய தீபன் தலைமையில் நடந்த இக்கருத்தரங்கில் வரவேற்புரை நிகழ்த்திய தமிழ் ஆர்வலரும், இலக்கிய முன்னோடிகளில் ஒருவருமான ஞானி, கோவையில் வரும் 23ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழியை மேம்படுத்தக்கூடிய ஆய்வுகளை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு தமிழக அரசு உதவுவது தொடர்பான ஒரு தெளிவான திட்டத்தை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இக்கருத்தரங்கில் ஞானியும், அவருடைய நண்பர்களும் உருவாக்கிய ‘தமிழியல் ஆய்வை மேம்படுத்தும் நோக்கில் ஒரு கொள்கை அறிக்கை’ வெளியிடப்பட்டது.

“கோவையில் நடைபெறவுள்ள தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழியல் ஆய்வுக்கு இப்பொழுது கிடைத்திருக்கிற மிகப் பெரிய வாய்ப்பு. இந்திய வரலாற்றில் தமிழர்களின் பங்கு மிகப் பெரியது. இந்திய நாகரிகத்தின் அடித்தளம் முழுவதும் தமிழர் நாகரிகம்தான் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம்தான் என்பதில் இப்பொழுது எவருக்கும் ஐயமில்லை. ஆதிச்சநல்லூர் பற்றியும் அது பற்றிய அண்மைக்கால ஆய்வையும் விரிவாக அறிகிறோம். பூம்புகார் கடலியல் ஆய்வு தமிழர் வாழ்வை 11,500 ஆண்டுகளுக்கு முன் கொண்டுச் செல்கிறது. உலகளவில் நூற்றுக்கணக்கான மொழிகளில் தமிழ் இடம் பெற்றிருப்பதையும் ஆய்வாளர் தொடர்ந்து ஆய்ந்து வருகின்றனர்.

ஆரியர் வருகைக்கு முன்பே இந்தியா முழுவதும் தமிழர் பரவியிருந்தனர். இந்திய வரலாற்று ஆய்வைத் தென்னிந்தியாவில் இருந்துதான் தொடங்க வேண்டு்ம என்று அறிஞர்கள் கூறியிருக்கின்றனர். இந்திய நாகரிகத்தின் அடித்தளம் என்று அறியப்படுகிற வேளாண்மை, நீர்ப்பாசனம், கால் நடை வளர்ப்பு, சிற்பம், மருத்துவம், இசை, கணிதம், வானவியல், தர்க்கம், மெய்யியல் முதலிய அனைத்துக் களங்களுள்ளும் தமிழரின் பங்களிப்பே முதன்மையானது. தமிழைச் செம்மொழியென நிறுவும் முறையில் இந்தியா மற்றும் உலகு தழுவிய இவ்வாய்வை நாம் எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கான அறிவுத் தரமும் ஆய்வுத் திறமும் நமக்கில்லாமல் இந்தியச் சூழலில் இன்று நம்மை நிறுவிக் கொள்ள முடியாது. இந்திய வரலாற்றில் தமிழர்களின் தொன்மையான வரலாறு, நாகரிகம் பற்றி நாம் விரிவாகச் சொல்ல வேண்டியதில்லை. சங்க இலக்கியங்கள் முதலியவை இதற்குச் சான்றாகின்றன. இந்தியாவின் அரசியல், பொருளியல், பண்பாடு முதலியவற்றில் தமிழர் தமக்கென இடத்தை பெறும் முறையில் நமக்கு ஆய்வுகள் தேவை.

இந்திய அரசின் ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்து நம்மை நாமே சுருக்கிக் கொண்ட நிலையில்தான் காவேரி முதற்கொண்டு எவ்வளவோ சிக்கல்களை நாம் எதிர்கொள்கிறோம். ஈழத்தமிழகத்தின் அழிவிற்கும் இதுவே காரணம். தமிழர்களின் அரசியல், பொருளியல் முதலிய எத்தனையோ நலன்களை நாம் மற்றவரிடம் இழந்த நிலையில் இன்று தன்மானம் அழிந்து வாழ்கிறோம்.

வள்ளுவர், இளங்கோ என்றெல்லாம் இன்று நம்மால் உண்மையோடும் உறுதியோடும் உணர்ந்து பேச முடியவில்லை. இந்திய அரசியலுக்கு மட்டுமல்லாமல் உலக அரசியலுக்கும் இடங்கொடுத்து நாம் வறியவர் ஆகிக் கொண்டிருக்கிறோம், இவை பற்றிய உணர்வோடு தமிழர் தலை நிமிர்ந்து வாழும் முறையிலான ஆய்வுகள் நமக்கு இல்லாமல் முடியாது. செம்மொழி என்ற முறையில் நாம் செய்ய வேண்டிய ஆய்வுத் திட்டம் என ஒன்றைப் பேராசிரியர் சிவத்தம்பி முன்வைத்தார். சுமேரிய மொழியோடும், சமஸ்கிருத மொழியோடும், வட இந்திய மொழிகளோடும், தென்கிழக்காசிய மொழிகளோடும் நமக்கு என்ன உறவு என்பதை ஆராய வேண்டும் என்றார். மொழித்தளத்தில் மட்டுமல்லாமல் வேறு பல தளங்களிலும் இந்த ஆய்வு விரிவு பெற வேண்டும்.

செம்மொழி மாநாட்டில் இத்தகைய ஆய்வுகள் முன்வைக்கப்படுமென்றால் மாநாடு குறைந்த அளவுக்கேணும் தன் பொறுப்பை நிறைவு செய்ய முடியும். தமிழர், தமிழறிஞர் தம்மை உணர்ந்து கொள்ள வேண்டிய மிகப்பெரும் வாய்ப்பாக இந்த மாநாடு பயன்தர வேண்டும். இவை நம் எதிர்பார்ப்புகள்” என்று அக்கொள்கை அறிக்கை கூறுகிறது.

இக்கருத்தரங்கில் தமிழ் அறிஞர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான தமிழ் மலர் 2010 வெளியிடப்பட்டது. பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி மலரை வெளியிட்டு உரையாற்றினார்.
தமிழ் மலர் 2010இல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகள் மீதான மதிப்புரையை கண. குறிஞ்சியும், பேராசிரியர் க.பூரண சந்திரனும் நிகழ்த்தினர். பேராசிரியர் கி.நாச்சிமுத்து வாழ்த்துரை வழங்கினார்.

கொள்கை அறிக்கை மீதான கருத்துரை வழங்கிப் பேசிய இதழாளர் கா.அய்யநாதன், தமிழர் வாழ்வில் பண்பாட்டிற்கு உள்ள இடத்தையும் அவசியத்தையும், அதன் ஆழத்தையும் விளக்கிப் பேசினார்.

தமிழ் இயக்கம், தமிழ் வரலாறு, தமிழ் நாகரிகம் என்ற தலைப்பில் இராசேந்திர சோழன் சிறப்புரையாற்றினார்.

அறிவன் தீர்மானங்களைப் படித்தார்.

தமிழ் மலர் 2010 கிடைக்குமிடம்:

தமிழ் நேயம்24, வி.ஆர்.வி.நகர்,
ஞானாம்பிகை ஆலை அஞ்சல்,
கோவை - 29
தொலைபேசி 2648119

விலை: ரூ.250.00

Share this Story:

Follow Webdunia tamil