“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” - 3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு!
, புதன், 11 டிசம்பர் 2013 (19:15 IST)
வாரிஸ் டைரி! உலகின் முன்னணி ஆஃப்ரிக்க மாடல் அழகி. லாரா ஸிவ், உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ நிருபர். வாரிஸ், தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
‘‘சோமாலியாவில், கரடுமுரடான ஒரு பாலைவனக் கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்களது நாடோடிக் குடும்பம். இங்குள்ள பாத்ரூமைவிட மிகச் சிறியது எங்கள் குடிசை. பசுமையே பார்த்திராத கண்கள் என்றாலும், எல்லா குழந்தைகளையும்போல நானும் சந்தோஷமாகத்தான் இருந்தேன். ஆடு மாடுகளை மேய்ப்பேன். வரிக்குதிரைகளோடு ஓடுவேன். ஒட்டகச்சிவிங்கிகளை துரத்துவேன். பாட்டுப் பாடுவேன்.ம்ஹ்ம்… இந்த சந்தோஷமெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். எனக்கு மட்டுமில்லை. சோமாலியாவில் பிறந்த எல்லா பெண்களுக்குமே இப்படித்தான்.ஆஃப்ரிக்காவைப் பொறுத்தவரை பெண்கள்தான் எல்லாமே. ஆண்களைவிட அவகள் கடினமாக உழைக்கிறார்கள். வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், என்ன செய்து என்ன? எந்த உரிமையும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. காலம் முழுக்க ஆண்களுக்கு அடிமையாக இருந்தே சாகவேண்டும். என் வாழ்க்கை ஐந்தோடு முடிந்தது.எங்களது நாடோடிக் குடும்பமில்லையா? அங்கே, ‘கல்யாணமாகாதவள்’ என்கிற பேச்சுக்கே இடமில்லை. பாடையோ, பரதேசியோ! எவன் கையிலாவது எங்களை பிடித்துக் கொடுத்துவிடவேண்டும். அதுவும் கன்னித் தன்மையோடு. அதுதான் அவர்களின் வாழ்க்கை லட்சியம். பெண்களைப் பொறுத்தவரை, சோமாலியர்களின் ஞானம் ரொம்பவே வித்தியாசமானது. எல்லா கெட்ட விஷயங்களும் பெண்களின் தொடைகளுக்கு நடுவில் ஒளிந்து கிடப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.இதற்காக அவர்கள் செய்கிற அக்கிரமம் இருக்கிறதே…அப்போது, எனக்கு ஐந்து வயது இருக்கும். ஒரு சாயங்கால நேரம்.அம்மா என்னிடம் வந்து, ‘‘உங்கப்பா, மருத்துவச்சியை பாக்கப் போயிருக்கார். அந்தப் பொம்பள எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம்’’ என்றார்.அன்றைக்கு, என்றும் இல்லாத கவனிப்பு எனக்கு. போதுமான அளவுக்கு சாப்பிடக் கொடுத்தார்கள்.‘‘பாலையும் தண்ணியையும் அதிகம் குடிச்சிறாதடி’’ -அம்மா அறிவுரை சொன்னாள்.சாப்பிட்டு முடித்து, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு சந்தோஷமாக படுத்தேன். முழிப்பு வந்தப்போது, வானம் இருட்டாக இருந்தது. மீண்டும் படுத்துவிட்டேன்.‘‘வாரிஸ்’’அம்மா திடீரென்று எழுப்பினாள்.நாங்கள், தூரத்துல் தெரிந்த குன்றை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.‘‘இப்படி உக்காருவோம். அவ வருவா.’’ என்றார் அம்மா.வானம் நன்கு விடிந்திருந்தபோது, ‘சர்க், சர்க்’ என்று செருப்பு சத்தம் கேட்டது. மருத்துவச்சி வந்துவிட்டிருந்தாள்.
படுக்கை மாதிரி இருந்த ஒரு பாறையைக் காட்டி, ‘‘அங்க போய் உக்காரு’ என்றாள். அம்மாதான் என்னை பாறை மேல் படுக்க வைத்தார்கள். அங்கே, பேச்சுக்கே இடமில்லை. என்னை படுக்க வைத்துவிட்டு.. அம்மா, என் தலைக்குப் பின்னால் உக்கார்ந்துகொண்டாள். என் தலையை இழுத்து அவள் மடியில் வைத்துக்கொண்டு, தன் கால்களை எடுத்து என் கைகள் மீது போட்டாள். நான் அம்மாவின் தொடைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன்.
பிறகு ஒரு மரத்துண்டை எடுத்து என் வாயில் வைத்தாள்.
‘‘இறுக்கமா கடிச்சுக்க. அம்மாவ பாரு. எவ்ளோ தைரியமா இருக்கேன். அதுபோல நீயும் இருந்தா, சட்டுனு முடிஞ்சிடும்.’’
நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். பழைய கைப்பை ஒன்றை வைத்துக்கொண்டு அந்த மருத்துவச்சி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் கண்ணில் அப்படியொரு பேய்த்தனம்.
பைக்குள், தன் விரல்களைவிட்டு அரக்கப் பரக்க எதையோ தேடினாள். இறுதியாக ஒரு ரேசர் பிளேடு வந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் புரிந்தது.
பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன.
‘த்துப்..’
பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி. அதை, தன் துணியில் துடைத்தாள். அவள் துடைத்துக்கொண்டிருக்கும்போதே, அம்மா தன் கைகளை எடுத்து என் கண்களை மூடினாள்.
நான், உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன்.
அடுத்த நொடி…
‘பர்ர்க்’ என்று ஒரு சத்தம்.
படக்கூடாத இடத்தில் பிளேடு பட்டு, என் சதை கிழிவது நன்றாகத் தெரிந்தது. எந்த காலத்து பிளேடோ? துருபிடித்து, பற்களோடு இருந்திருக்கவேண்டும். நரநரவென்று மேற்கொண்டு முன்னும் பின்னுமாக இழுத்தாள் அந்தக் கிழவி.
‘அய்யோ…!’ -நரக வேதனை.
அசையக்கூடாது. அசைந்தால், வலி இன்னும் கொடூரமாகும். பற்களைக் கடித்துக்கொண்டு படுத்துக்கிடந்தேன். என் தொடைகள் நடுங்கின.
‘கடவுளே! இந்த நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா?’
ஒரு வழியாக அம்மா என் கண்களை விடுவித்தாள். வெளிச்சத்துக்கு பழகியதும் பார்க்கிறேன். அந்த கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள். குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம். அக்கேசியா முட்களைத்தான் ஒவ்வொன்றாக என் பிறப்புறுப்பில் குத்தியிருக்கிறாள். பிறகு கடினமாக வெள்ளை நூல் கொண்டு உறுப்பை தைத்திருக்கிறாள்.
சிறுநீர் கழிக்க ஒரே ஒரு துவாரம் வைத்துவிட்டு மீதி உறுப்பு மூடப்பட்டுவிட்டது. என் கன்னித் தன்மையும், ஒரு இனத்தில் கவுரவமும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இதற்கு, நான் செத்துப்போய் இருக்கலாம்.
தையல் முடிந்ததும் கிழவி போய்விட்டாள். நான் எழுந்திருக்க முயன்றேன். என்னால் அசையக்கூட முடியவில்லை. என் இரண்டு கால்களும் துணிப்பட்டையால சுற்றப்பட்டிருந்தன. அம்மா என்னை நகர்த்தியதும் பாறையைத் திரும்பிப் பார்த்தேன்.
ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன.
காற்று, நெருப்பு மாதிரி வீசிக்கொண்டிருந்தது. என்னால் சித்திரவதையைத் தாங்க முடியவில்லை. ஒருவழியாக அம்மாவும் அக்காவும் சேர்ந்து பக்கத்தில் இருந்த மர நிழலுக்கு என்னை இழுத்துக்கொண்டு போனார்கள். அங்கே, சிறிய குடிசை ஒன்று வேயப்பட்டிருந்தது. காயம் குணமாகிறவரை அங்கேதான் இருந்தாகவேண்டும்.
முதன் முதலாக எனக்கு சிறுநீர் வெளியேறியது நன்றாக நினைவிருக்கிறது. அந்த இடத்தில் அமிலத்தை ஊற்றினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது. உயிரே போய்விடும்படி எரிச்சல்… திகுதிகுவென தீப்பற்றி எரிந்தது பிறப்புறுப்பு. தையல் போடப்பட்டிருந்த பொத்தல்களின் வழியே தீக்குச்சி இறைத்தார்போல் சிறுநீர் வெளியேறியது.
மரண வேதனை.
இதனால், சிறுநீர் வந்துவிடுமோ என்கிற பயத்தில், தண்ணீர் குடிக்கவே பயந்தேன். பல நாட்கள் இப்படித்தான் வாழ்ந்தேன். திடீரென்று ஒருநாள் கிருமித்தொற்று ஏற்பட்டு கடுமையான காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. அம்மாதான் பார்த்துக்கொண்டாள். அந்த வயதில், எனக்கு செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரியும். ஒவ்வொரு தாயின் ஆசீர்வாதத்தோடுதான் இந்த சடங்கு நடைபெறுகிறது.
என் பெண்மை சிதைக்கப்பட்டது கொடூரமான விஷயம்தான். ஆனால், மற்ற பெண்களைக் காட்டிலும் நான் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லவேண்டும். பல சிறுமிகள் அதிர்ச்சியினாலும், ரத்தப்போக்கு, நோய்த்தொற்று காரணமாவும் இறந்து போய்விட, நான் மட்டும் உயிரோடு பிழைத்துக்கொண்டேன்.
நாட்கள் ஓடின.
நான் பதிமூன்று வயதை நெருங்கிக்கொண்டிருந்தேன். ஒரு நாள், மாலை நேரம்… ஆடுகளை அதன் பட்டியில் அடைத்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தேன்.
‘‘வாரிஸ்! இங்க வாம்மா’’ -அப்பா அன்போடு அழைத்தார்.
தன் மடிமேல் என்னை உட்காரவைத்துக்கொண்டார். வழக்கமாக அவர் குரலில் கடுமை இருக்கும்.
‘‘ஒண்ணு தெரியுமா? நீ ரொம்ப நல்ல பொண்ணு. ஆம்பளைங்களைவிட அதிகமா உழைக்கிற. மந்தையை ஒழுங்கா கவனிச்சுக்கிற. ஆனா… உன்னை பிரியப்போறதை நெனச்சா எனக்கு வருத்தமா இருக்கு’’
அப்பா, சம்பந்தமே இல்லாத வார்த்தைகளைப் பேசினார்.
‘அடடா! அக்கா மாதிரி நானும் ஒடிடப்போறேன்னு பயப்படுறாரோ!’
நான் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு,
‘‘அப்பா. நீங்க நினைக்கிற மாதிரி நான் எங்கேயும் ஓடிப்போக மாட்டேன்’’ என்றேன்.
அவர் என் முகத்தை திருப்பி,
‘‘எனக்கு தெரியும். நீ என் பொண்ணு. அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பாத்திருக்கேன்!’’ என்றார்.
எனக்கு தூக்கிவாரிப் போட்டது.
‘‘அப்பா. எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லை.’’
நான் கொஞ்சம் தைரியமாக வளர்ந்தவள். இப்போது பலவீனமாக உனர்ந்தேன்.
அடுத்த நாள் காலை. நான், பால் கறந்துகொண்டிருந்தேன்.
‘‘வாரிஸ்.. இங்க வா. இது நான் நீ…’’ அப்பா அழைத்தார்.
அவரோடு அவரைவிட மூத்த ஒருவன் உட்கார்ந்துகொண்டிருந்தான்.
அப்பா சொன்னதை நான் காதிலேயே வாங்கவில்லை. அவனும் அவன் மூஞ்சியும்! ஆட்டுக்கெடா மாதிரி தாடியை தொங்கப் போட்டுக்கொண்டு… 60 வயதிருக்கும் அவனுக்கு.
‘‘வாரிஸ்! வந்திருக்கிறவங்களுக்கு முதல்ல வணக்கம் சொல்லு.’’
‘‘வணக்கம்.’’
நான் எவ்வளோ முடியுமோ அவ்வளவு குழைந்து சொன்னேன். அந்தக் கிழட்டு ஓநாய், என்னைப் பார்த்து பல் இளித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தது. அவனை கொலைவெறியோடு முறைத்துவிட்டு, என் ஆப்பாவைப் பார்த்தேன். அப்பாவுக்கு புரிந்துவிட்டது.
சிரித்தவாறே… ‘‘சரி, சரி, போய் வேலையைப் பாரு’’ என்று சமாளித்தார்.
நான் மீண்டும் பால் கறக்க போய்விட்டேன்.
மறுநாள் காலையில் அப்பா கூப்பிட்டார்.
‘‘வாரிஸ். அவர்தான் நீ கட்டிக்கப்போற புருஷன்.’’
‘‘அப்பா! அந்தாள் ரொம்பக் கிழவனா இருக்கான்’’
‘‘அதுதாம்மா உனக்கு நல்லது. வயசான மனுஷன் இல்லையா! உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டார். உன்னை நல்லா பாத்துக்குவார். ஒண்ணு தெரியுமா? மாப்ள நமக்கு… அஞ்சு ஒட்டகம் குடுத்திருக்காரு’’ அப்பா, வாயை பிளந்துகொண்டு பெருமை பேசினார்.
அன்று முழுக்க நான் ஆட்டு மந்தையையே வெறித்துக்கொண்டிருந்தேன். மனதில் ஆயிரம் சிந்தனைகள். பாழும் பாலைவனத்தில் ஒரு கிழவனிடம் வாழ்க்கைப்படுவதை நினைத்துப் பார்த்தேன்.
‘த்தூ..
இந்த வாழ்க்கைக்கு, நாண்டுகிட்டு சாகலாம்.’ -ஒரு முடிவுக்கு வந்தேன்.
அன்று இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது வீடு.
நான் அம்மாவை நெருங்கி,
‘‘எனக்கு இங்கிருக்கப் பிடிக்கல. நான் ஓடப்போறேன்.’’ என்றேன்.
‘‘அடிப்பாவி. எங்க ஓடுவ?’’
‘‘மொகாதிஷு. அக்கா வீட்டுக்கு.’’
‘‘முதல்ல போய் படு’’ -பல்லைக் கடித்தவாறு அம்மா சொன்னாள்.
நான் கையை தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கப் போய்விட்டேன். திடீரென்று கை முட்டியில் யாரோ தட்டினார்கள்.
அம்மாதான்.
‘‘அந்தாள் முழிச்சிக்கிறதுக்குள்ள எழுந்து ஓடு’’ -கிசுகிசுத்தாள்.நான் சுற்றி முற்றி பார்க்கிறேன். எடுத்துச் செல்ல உணவோ, தண்ணீரோ, ஒட்டகப் பாலோ எதுவுமே இல்லை. நான் எழுந்து அவளை அணைத்துக்கொண்டேன். அந்த இருட்டிலும், அவள் முகத்தைப் பார்க்க முயற்சித்தேன். முடியவில்லை. தாரை தாரையாக கண்ணீர் மட்டுமே வழிந்தது.