பெரூ நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற இலக்கிய மேதை மரியோ வாரகஸ் யோஸாவுக்கு 2010ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு கிடைத்துள்ளது.
இவர் 1936ஆம் ஆண்டில் பிறந்தார். லத்தீன் அமெரிக்காவில் 1960ஆம் ஆண்டுகளில் புதிய இலக்கிய எழுச்சி அலை ஏற்பட்டது. அதில் மார்க்குவேஸ், கார்லோஸ் பியுண்டெஸ், அலேயோ கார்பெந்தியர், மச்சாடோ டீ அஸிஸ், கோர்த்தசார் உள்ளிட்ட எண்ணற்ற எழுத்தாளர்கள் தங்கள் மேஜிக்கல் ரியலிஸம் என்ற புதிய இலக்கிய உத்தி முறையால் உலகை உலுக்கினர். அதில் பெருமளவு புகழ பெற்றவர் யோஸா.
இவர்களின் எழுச்சி கிட்டத்தட்ட 18, 19ஆம் நூற்றாண்டுகளில் எழுச்சியுற்ற ரஷ்ய இலக்கியங்கள் போல் என்று கூறலாம்.
கியூபாவில் கம்யூனிசம் வெற்றியடைந்ததன் மூலம் பெரிய அளவில் தாக்கம் பெற்ற இந்த எழுத்தாளர்கள் அனைவரும் ஸ்பானிய, அமெரிக்க ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து எழுதினார்.
அதனால் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள அழிவையும், இளைஞர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு காணாமல் போனதும், இறந்து போனதும், புரட்சிகளெல்லாம் ரத்த வெள்ளத்தில் ஒன்றுமில்லாமல் அடிக்கப்பட்டதும் லத்தீன் அமெரிக்கா நாடுகள் முழுதும் நடைபெற்றுக் கொண்டிருந்த கொந்தளிப்பான காலக் கட்டம் அது.
லத்தீன் அமெரிக்காவின் மாபெரும் கதைசொல்லி என்று கருதப்படும் யோசா பெருமளவு பொலிவியாவில் இளம்பிராயத்தைக் கழித்து விட்டு பிறகு 1946ஆம் ஆண்டு மீண்டும் பெருவிக்கு பெற்றோருடன் வந்தார்.
இவரது முதல் நாவலான டைம் ஆஃப் த ஹீரோ நாவல் ராணுவப் பள்ளியில் நடைபெறும் கொடுமைகள் பற்றியது. அது அவரது சொந்த அனுபவம். அப்போது ஆத்திரமடைந்த பெரூவிய ராணுவ உயரதிகார்கள் இந்த நாவலின் பிரதிகளை எரித்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
ஆனால் இவரது கான்வெர்சேஷன் இன் கதீட்ரல் என்ற நாவல் பெரிய புகழ்பெற்றது. அதாவது உரையாடல்களின் மூலமே லத்தீன் அமெரிக்காவின் ரத்த வரலாற்றை எழுதியிருப்பார். எண்ணற்ற சிவில் யுத்தங்களினால் வீடுகளிலிருந்து இளைஞர்கள் மாயமாகி வந்தனர். இந்தப் பயங்கரத்தையும் போராளிக் குழுக்களுக்கு உள்ளே நடக்கும் அடக்கு முறைகள் பற்றியும் இவரது பதிவுகள் அதிர்ச்சியலைகளை எழுப்புபவை.
கான்வெர்சேஷன் இன் த கதீட்ரல் நாவலில் அவர் மானுயெல் ஏ. ஓட்ரியாவின் கொடூர எதேச்சதிகாரத்தின் பெரூ மக்களின் வாழ்க்கையை சித்தரித்திருந்தார். 1948 முதல் 1956 வரை எதேச்சதிகாரி ஓட்ரியாவின் ஆட்சியில் பெரூவின் சமூகம் முழுதையும் பிடித்து ஆட்டிய ஊழல், கண்காணிப்பு சமூகத்தின் உயர்மட்டம் முதல் தாழ்வு மட்டம் வரையில் உள்ள பெரும்பகுதியினர் எதேச்சதிகாரியின் கைக்கூலிகளாக இருந்தமை அகியவற்றை அவர் தனது கதைசொல்லல் முறையால் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் பலர் எழுதியுள்ளனர். 5 கதாபாத்திரங்களின் நோக்கிலிருந்தும் கதைகூறல் முறை இந்த நாவல் முழுதும் சிக்கலான கோணங்களில் பயணிக்கிறது.
இவரது எழுத்துக்களில் அரசியல் சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்தியது. ஃபீஸ்ட் ஆஃப் தி கோட் நாவலிலும் டொமினிகன் குடியரசை ஆண்ட எதேச்சதிகாரி ரஃபேல் ட்ருயிலோவின் ஆதிக்கம் பற்றியது.
இவர் நாவல்கள், சிறுகதைகள், ஆகியவற்றுடன் சிறந்த இலக்கிய விமர்சகராகவும், சிறந்த பல கட்டுரைகளை எழுதுபவராகவும் தன் வாழ்நாளைக் கழித்துள்ளார். .
ஃபீஸ்ட் ஆஃப் தி கோட், ஆண்ட் ஜூலியா அண்ட் தெ ஸ்க்ரிப்ட் ரைட்டர், தி வார் ஆஃப் தி எண்ட் ஆஃப் தி வேர்ல்ட், டெத் இன் த ஆண்டீஸ் ஆகிய புகழ் பெற்ற நாவல்களுக்கு யோஸா சொந்தக்காரர்.
கடைசியாக எழுதிய டெத் இன் த ஆண்டிஸ் என்ற நாவலில் ஒரு பழைய சமூகத்தின், அதாவது இன்றும் வாழும் ஒரு பண்டைய சமூகத்தின் வன்முறைசார்ந்த வாழ்வியல் பயங்கரங்களை எழுதியுள்ளார். 'ஒளிரும் பாதை' என்ற இடது சாரி இயக்கத்தின் அடக்கு முறைகளையும் கொலைகளையும் இந்த நாவலில் அம்பலப்படுத்தியுள்ளார் யோஸா.
மேலும் மனித விரையை உண்ணும் உணவாக உட்கொண்டு வாழும் ஒரு சமூகத்தின் பயங்கரத்தையும் இந்த நாவலில் எழுதியுள்ளார் யோஸா. இவரது நாவல்கள் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் தொடர்ந்து மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.
யோசாவின் ஓரிரு கதைகளும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
முன்னதாகவே இந்த நோபல் பரிசு இவருக்கு அளிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் காலம் கடந்ததாக இருந்தாலும் நோபலுக்கே பெருமை சேர்க்கும் பெயர் யோஸா என்றால் அது மிகையானது அல்ல.