அர்த்த அலகு 2
குயில் கூவிக்கொண்டிருக்கும் கோலம் மிகுந்த
மயிலாடிக் கொண்டிருக்கும் வாசம் உடையநற்
காற்றுக் குளிர்ந்தடிக்கும் கண்ணாடி போன்றநீர்
ஊற்றுக்கள் உண்டு கனிமரங்கள் மிக்க உண்டு
பூக்கள் மணங்கமழும் பூக்கள்தோறும் சென்றுதே
னீக்கள் இருந்தபடி இன்னிசைபாடிக் களிக்கும்
வேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு
காட்டு மறவர்களும் காதல் மணம் செய்வதுண்டு
நெஞ்சில் நிறுத்துங்கள் இந்த இடத்தைத்தான்
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்று சொல்லிடுவார்.
சஞ்சீவிபர்வதத்தின் சாரலை அர்த்த அலகுகளாகப் பகுக்கும்போது வாசகனின் வேலை மிகவும் குறைந்துவிடுகிறது. காரணம், இக்கவிதைப் பிரதியே அதன் மூலவடிவத்தில் முப்பத்தைந்து அர்த்த அலகுகளாகப் பிரிந்துள்ளது. இப்பகுப்புகள் ஆசிரியரே செய்தவையா அன்றி வேறெவரும் செய்தவையா என்பது தெரியவில்லை. இருப்பினும் அந்தப் பகுப்பு களையே நாம் ஏற்றுச் செயல்படலாம். இப்படி ஏற்றுக்கொள்ளும்போது, மேற்கூறிய முதல் பத்து அடிகள் முதல் அர்த்த அலகாகக் கவிதையில் அமைகின்றன. தலைப்பை முதல் அர்த்த அலகாக நாம் கொண்டுவிட்டதால் இதனை இரண்டாம் அர்த்த அலகு என்கிறோம்.
இப்பகுதியின் நோக்கம் ஒரு செயற்களத்தை அறிமுகப்படுத்துவது. இதில் செயல்குறித்த சங்கேதம் எதுவும் கிடையாது. குறிப்பீட்டலகு, பொருள்கோள், கலாச்சாரச் சங்கேதங்கள் உள்ளன. கலாச்சாரச் சங்கேதங்கள் முதன்மை பெறுகின்றன. முதல் ஆறு அடிகளில் மானிடக்கலப்பற்ற தூய இயற்கை வருணனை பெறுகிறது. ஏழாம் எட்டாம் அடிகளில் குறைந்தபட்ச அளவில் கலாச்சார இருப்பு சுட்டிக்காட்டப் படுகிறது. வேட்டுவப் பெண்கள், காட்டுமறவர்கள் ஆகியோர் வாயிலாக. ஆகவே இப்பகுதியில் இயற்கை-கலாச்சாரம் என்னும் முரண் முன்நிறுத்தப்படுகிறது. தமிழின் தொடக்கக் கலாச்சாரமான குறிஞ்சிநில மக்களை இயற்கையின் பகுதியாகவே கொள்ளலாம் என்றாலும், அவர்களது இருசெயல்களும் (காதல் மணம் புரிதல்,வேட்டை யாடுதல்) இயற்கையிலிருந்து அவர்களை மிக நன்றாகப் பிரிக்கின்றன.
இரு குறிப்புகள் இங்கு காண்பதற்குரியன. ஒன்று, வழக்கம்போலவே பெண்-ஆண் முரணும் இங்கு உள்ளது. பெண்கள் விளையாடுகிறார்கள் (அவர்கள் இயற்கையின் பகுதி); ஆண்கள் வேட்டையாடுகிறார்கள் (இயற்கையின் பகுதி), காதல்மணம் புரிகிறார்கள் (செயற்கையின் பகுதி). மணம் புரிதல் என்பதே ஒரு கலாச்சாரச் செயல்பாடுதான். இயற்கையில், விலங்குகளுக்கு, அல்லது ஆதிமனிதனுக்கு, மணம்புரிதல் என்பது இயலாதது. தொல்காப்பியர் சொற்க ளில் கூறினால், பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் (அதாவது கலாச்சாரம் தோன்றிய பிறகு) ஐயர் யாத்தனர் கரணம் என்ப (உயர்ந்தோர் திருமணச் சடங்குகளை வகுத்தனர்)
மேலும் வேட்டை என்பதன் அடிச்சொல் வேள் என்பது. (வேள் என்பது பெயர்ச்சொல் ஆயின் விருப்பந்தரும் பண்புகளை உடையன், விரும்பப்படுபவன் என்னும் அர்த்தம் பெறும்; வினைச்சொல்லாயின், விருப்பம் கொள் எனப்பொருள்படும்). வேட்டையின் அடிப்படையும், காதல் மணத்தின் அடிப்படையும் விரும்புதலே. ஒன்று வயிற்றுப்பசி, இன்னொன்று உடற்பசி அடிப்படையில் எழுபவை. இவை ஆசிரியநோக்கிற்கு இயையவே உள்ளன. பாரதிதாசன் செயற்கைக்கு-கலாச்சாரத்திற்கு-பகுத்தறிவிற்கு முதன்மை அளிப்பவர். அறிவின் பகுதியாகிய ஆணுக்கும் முதன்மை அளிப்பவர். ஆணுக்கு முதன்மை அளிப்பவர் என்பதைக் குடும்பவிளக்கு, இருண்ட வீடு போன்ற பிரதிகளிலும் காணஇயலும்.
எனினும் தானாகவே இப்பகுதியில் இயற்கை முதன்மைப்பட்டு, ஆசிரியநோக்கம் தன்னிச்சையாகக் கவிழ்ப்புப்பெறுகிறது. ஒருவகையில் இக்கவிதையின் உள்ளடக்கமே இது தான். பகுத்தறிவை-செயற்கையை-ஆண்மையை-கலாச்சாரத்தை நனவுநிலையில்உயர்த்த வரும் ஆசிரியச்செயல் தானாகவே கவிழ்ப்புப் பெற்று, உள்ளுணர்வு-இயற்கை-பெண்மை உயர்வு பெறுகிறது என்பதுதான் சஞ்சீவிபர்வதத்தின் சாரல் உணர்த்தும் செய்தி. சான்றாக,
பகுத்தறிவு - ஆண் - கலாச்சாரம் - உயர்வு
உணர்வு - பெண் - இயற்கை - தாழ்வு
என்பது காலங்காலமாக வரும் முரண். இது இக்கவிதையில் கவிழ்ப்புக்குள்ளாகிறது. இப்பிரதியில் பெண் கூருணர்வும் பகுத்தறிவும் கொண்டவளாக இருக்கிறாள். ஆகவே அவள் உடலளவில்தான் பெண். செயலில் ஆண். இதேபோலத்தான் ஆணும்-அதாவது குப்பனும். இவன் பகுத்தறிவற்றவனாக, மூடநம்பிக்கைகள் உள்ளவனாக, யூகச்செயல் அற்றவனாக, குறிப்புணர்தல் திறன் அற்றவனாகப் படைக்கப்பட்டிருக்கிறான்.
இவ்வடிகளில் முதலில் இடம்பெறும் வருணனை தூய கனவுலகிற்குரியது, அதிகக் கற்பனைத் திறன் தேவையற்றது. இதைத் தொடர்ந்துவரும் ஆசிரியக் குறுக்கீடு (நெஞ்சில் நிறுத்துங்கள்-இந்த இடத்தைத்தான் சஞ்சீவிபர்வதத்தின் சாரல் என்று சொல்வார்கள்) முன்னடிகள் உருவாக்கிய கனவுத்தன்மை நிரம்பிய காட்சியை அடியோடு தகர்க்கின்றன. இது வெறும் கற்பனைக் கதைதான் என்று யதார்த்த உலகிற்குக் கொண்டுவருகிறது. இக்குரல் சற்றே ஆணையி டும் தொனியில் இருக்கிறது. அடுத்த அர்த்த அலகிலிருந்து இது மென்மைபெற்று கதைசொல் லத் தொடங்குகிறது.
இதுவரை பார்த்த இரு அலகுகளிலேயே அர்த்தங்கள் உருவாகும் முறையும் அவை தங்களைத் தாங்களே தகர்த்துக்கொள்ளும் முறையும் ஓரளவு காட்டப்பட்டன. எந்தப் பிரதியிலும் இவ்வாறுதான் அர்த்த உருவாக்கமும் அர்த்தத் தகர்ப்பும் மாறிமாறி நிகழ்கின்றன என்பது பொதுநிலை.