-முனைவர் பி.ஆறுமுகம். செயின்ட் ஜோசப் கல்லூரி, தமிழ்த்துறை
Advertiesment
, புதன், 5 டிசம்பர் 2007 (11:59 IST)
உடல் மூன்று : ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்பவையே அவை. அவற்றுள் ஸ்தூல சரீரம் என்பது பஞ்சபூதங்களால் ஆனது.
"The Volume of the body occupies `space', the breathing and the respiratory system is due to air, the warmth in the body is due to `fire', and the body is made up of 'water', and the minerals (earth)" .1
நீராலும் நிலத்தாலும் உருப்பெறும் ஸ்தூல சரீரம், தீயால் வெப்பம் பெற்று, காற்றைச் சுவாசித்து, ஆகாயதத்து இடம் பெறுகிறது. முன்வினைகாரணமாய்ப் பிறப்பெடுத்து, சுகம், துக்கம் போன்றவற்றுள் உழன்று, ஆறுவகை மாற்றங்கள் பெறுகின்றது. The six Modifications namely: is, born, grows, changes, decays and dies" - இருப்பது, பிறப்பது, வளர்வது, மாறுவது, தேய்வது, இறப்பது என்பவையே அம்மாற்றங்கள்.
நீராகிய தெய்வம், வாயாகிய ஞானேந்திரியததின் சுவையாகிய உணர்வைக் கட்டுப்படுத்தி நிற்கிறது. உடலை உருவாக்கி, அறுவகை மாற்றமாக்கி, வாயுணர்விற்குத் தலைமை ஏற்று நிற்பது நீர் என்பது தெளிவாகின்றது. 'சரயு என்பது தாய்முலை அன்னது' என்ற கம்பர் வாக்கும் இதனை வலியுறுத்தும்.
நந்த வனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தான்டி. 2
இச்சித்தர் பாடலும் நிலமும் நீரும் உடலை உருவாக்குதலை உருவகமாய்க்காட்டும்.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய தூஉம் மழை 3
என்பார் வள்ளுவர். உண்டார்க்கு உண்பவற்றை உளவாக்கி, உண்பார்க்குத் தானும் உணவாவதும் மழை. உணவாலே உருவாகி, உணவாலே வளர்ந்து, மண்ணிற்குச் செல்வது உடல். இறந்துவிழும் உடல் யார்க்குச் சொந்தம்?
தாயும், தந்தையும், நீரும், தீயும், நிலமும், நாயும், நரியும், பேயும், கழுகும் பிறவும் உரிமை கொண்டாடுகின்றன. அவற்றில் நீர்க்கும் உரிமை உள்ளது. சிந்தனைக்குரியது.
'தாய் எனதென'.4
webdunia photo
WD
காவிரிக்கரைவாழ் தமிழக ஐந்து மாநிலக்காரர்களும், கர்நாடக மாநிலக்காரர்களும் அஸ்தியைக் காவிரியில் கரைப்பது இதனால்தான். துறவியர் விரும்புவது ஜலஸமாதி. திருமாலை அடைய நினைப்பவர், பாதத்தில் உருவான கங்கையில் கரைக்கப்பட விரும்புவர். முழு உடலை நீரில் இழுத்துவிடுவது, மச்ச அவதாரம் கொண்டு திருமாலால் நேரடியாய் உண்ணப்பட்டு. அத்துவைத நிலைபெற நினைப்பதனால்தான்.
பிதுர்க்கடன் ஆற்ற, பகீரதன், ஆகாயகங்கையைப் பிரயத்தனப்பட்டுக் கொண்டு வந்து பூலோக கங்கை ஆக்கினான். சீர்காழி வனத்து மூங்கிலில் எறும்பாகி, சூரபன்மனின் தாக்குதலுக்குத் தப்பி வாழ்ந்தான் இந்திரன். வனம் காயச் செய்தான் சூரபன்மன். இந்திரனோ விநாயகரை வேண்டக் காகவடிவம் கொண்ட விநாயகர் அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்துவிடக் காவிரி பெருகி ஓடியது. சீர்காழி வனமூங்கில்கள் வாழ்ந்தன. சிற்றெறும்பு வடிவம் கொண்டிருந்த இந்திரனும் தப்பி வாழ்வுபெற்றான். கங்கை, பகீரதன் முன்னோர்களைக் கரையேற்றினான் காவிரியோ, மூங்கிலும் சிற்றெறும்பும் வாழும் வழி செய்தாள்.
நீரின் செயலை நின்றே கேளும்! மழைநீர் அறிவுடன் குளிர்வு தருமே! ஆற்று நீரோ சுக்ல விருத்தி! கிரந்தி சொரிதாம் பனி நீர் போக்கும்! வாதம் தருவது குளத்து நீராம்! வாயுவைப் பெருக்கல் ஏரி நீராம்! வெப்பம் தணிப்பது கிணற்று நீராம்! தாபம் தருவது நீரமை ஓடை! சீத சுரமே சுனைநீர் இயல்பே! பித்தம் போக்கல் ஊற்று வேலை! இரத்தம் பித்தம் அருவியில் நீக்கம்! தேகபாரம் அடவிநீர் தருமே! கடல்நீர் அதனால் வினையும் மாறும்!5
மாசு போகப்புனல் படிவதும் தீது நீங்கக்கடல் ஆடுவதும் பட்டினப்பாலை காட்டும் செய்தி. பன்னிருவகை நீர்க்கும் பன்னிருவகை குணங்கள். ஆற்று நீர் ஆண்மை வளர்க்கக் கடல் நீர் வினையும் நீக்கும். மலைத்தலைய கடற்காவிரி எனும் சிறப்புடைய காவிரிக்குச் சுக்லவிருத்தி தரும் பொது இயல்பு உண்டு. ஓடிவரும் காவிரி அருவியாய்ப் பொங்கி வழியும்போது இரத்த பித்தம் நீக்கும். திருவரங்கத்தையும் ஆனைக்காவையும் தீவுகளாக்கித் திருமால் மார்பில் மாலையாகி வருவதால் வினையும் நீக்கும். மதிமருட்சி கொண்ட மக்கள் காவிரிக்ரை குணசீல நீரால் அறிவுத் தெளிவைத் திரும்பப் பெறக்காண்கிறோம். மாறிய குணம் சீலம்பெறும் தலம் குண சீலம். அதனைச் செய்வது காவிரி நீர். வாழ்வு முடிந்து மோட்சம் பெறுவது கங்கையால். வாழும்போதே மனநலக்கெட்டோர் மனநலம் பெறுவதும காவிரிநீரால் என்பதைக் குணசீலத்தலம் இன்றும் மெய்பிக்கக் காண்கிறோம்.
webdunia photo
WD
காவிரிக் கரை ஜீயபுரம் பகுதியில் வாழும் மக்களில் பலர் செவிகேளா நிலைக்குக் காரணம் காவிரியில் குளிப்பதே என்று கூறுவது உண்டு. குடகுமலை தொடங்கிப் பூம்புகார் வரை வாழும் காவிரிக்கரை வாழ் மக்கள் அடையாத துன்பமொன்றைச் ஜீயபுரம் மக்கள் அடைவது உண்மையெனின் ஜீயபுரத்துக்காவிரியாற்று அடிமண்ணும், கரைவாழ் தாவரங்களும் ஆய்வு செய்யப்பெற வேண்டியன.
'தண்ணீருங் காவிரியே!' என்பது தனிப்பாடல். 'கங்கை நதிபுரத்துக் கோதுமைப் பண்டத்தைக் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்' என்பது பாரதி வாக்கு. கும்பகோணத்துக் கொளுந்து வெற்றிலையின் சிறப்பே பாரதி குறிப்பது. மஞ்சளும், இஞ்சியும், கரும்பும், நெல்லும், வாழையும் தஞ்சைத் தரணியில் மிகுதி. காவிரிப் பெயர்கொண்ட பொன்னி அரிசி தனிமதிப்புடையதாம். கம்பும் சோளமும்கூடச் சிறப்புடையன. பயிர்வளம் கூட்டும் காவிரிக்கரை வாழ் மக்களும் தனி அழகு பெறுவது இயல்பே! திருவரங்கத்துப் பெண்கள்' அழகும் ஆண்களின் அழகும் காவிரி நீர்தரும் அழகே!
webdunia photo
WD
ஆற்றுத் தண்ணீர்க்கு அழகுண்டாம் அடைந்த சுனைக்கு மகோதரமாம் தூற்று மாரிமெய்யிறுக்கும் தொலையாக் கிணறே கயந்திரட்டும் மாற்றுங்குளமே வியாதியில்லை மாறாக்குளமே வியாதியுண்டு தோற்ற மதுரமொழி மயிலே துலங்குந்தண்ணீர்க் குணங்காணே!
என்ற தனிப்பாடல் இதனை மெய்ப்பிக்கும்.
திருவண்ணாமலையில் தீயாகி, தில்லியில் வெளியாகி, திருவாரூர் மண்ணாகி, காளஹஸ்தியில் காற்றாகி, ஆனைக்காவில் நீரானவன் சிவபெருமான். தில்லையும், திருவாரூரும் ஆனைக்காவம் காவிரிக் கரைத்தலங்கள். பரதத்தில் மறைந்தது பார்முதல் பூதம்; பரத்தை மறைத்தது பார்முதல் பூதம். பரத்தில் நீரில் பார்முதல் பூதம் மறைந்த தலம் திருவானைக்கா. அங்குள்ள நீர்காவிரி நீர். பானையாகிய கரகத்தில் காவிரி நீரை அடைத்துக் காவிரிக்கரை மக்கள் பங்குனி, சித்திரை மாதங்களில் ஆலயங்களில் கரகவிழாக்களை நடத்துவதை இன்றும் காணலாம்.
மஞ்சனநீர் கொணர்தல் பெருவழக்காய் நிற்கிறது. கும்பகோண மகாமகக் குளத்து நீர், பன்னிரண்டு ஆண்டிற்கு ஒரு முறை கங்கை, யமுனை உள்ளிட்ட நவநதிகளின் நூற்றியெட்டுத் தீர்த்தங்களால் நிறைவதால், புனிதநீராடல் பெருவிழாவாய் நடக்கக் காண்கிறோம். தாயுமானவர் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றையும் இறையாக்குவதைப் பராபரக் கண்ணியொன்றால் உணரலாம். 'கங்கைதன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழிகாவிரி' எனும் இளங்கோவின் வாக்கும். 'கங்கை ஆடிலென், காவிரி ஆடிலென்' எனும் கூற்றும் இருபெரும் ஆறுகளும் இறைத்தொடர்பு மிகுதியும் பெறுவதை விளக்கி நிற்பன.
பிள்ளைத் தமிழ்ப் பருவங்கள் பத்தில் நீராடல் பெண்பாற்குரியது. காளையும் கன்னியும் இணைவதற்குப் பூத்தரு புணர்ச்சி. களிறுதருபுணர்ச்சி. புனல்தரு புணர்ச்சி மூன்றும் ஏதுவாகும். அருவி ஆடி அஞ்சுனைக் குடையும் பெண்களை நீர் இழுத்துச் செல்ல, மீட்டுவரும் ஆடவர் கைப்பிடிப்பதே புனல்தரு புணர்ச்சியாம். இதனால் ஆடவர் நீர்மேல் ஆடும் கலையில் வல்லவராவர். அறுபத்து நான்கு கலைகளில் ஒன்று ஜலஸ்தம்பம் என்பதாம். காவிரிக்குக் கல்லணை கண்ட கரிகாலன் மகள் ஆதிமந்தி. நீர்மேல் ஆடுதலில் வல்லவன் ஆட்டனத்தி ஆயினும் காவிரி நீரால் அடித்துச் செல்லப்பெற்றபோது 'ஆதிமந்திபோலப் பேதுற்று அலைய' எனும் சங்கத் தொடர் கூறுபது போல, காவிரிக்கரை நெடுகக் கரைந்து சென்றவன் ஆதிமந்தி. இச்சங்கச் செய்தி காவிரியாற்றொரு தொடர்பு பெற்றது. இன்னும் ஆடிப்பெருக்கன்று வீரம் காட்ட ஆடவர் காவிரியில் துடுமெனப் பாய்ந்து ஓடும் நீரில் எதிர்த்துச் செல்வது பண்பாட்டுத் தொடர்புடைய செயலே!
காவிரியின் திருப்பெயர்கள் பன்னிரண்டில் கல்யாண தீர்த்தரூபி என்பதும் ஒன்று. திருமண மாலைகளைப் பாதுகாத்து வைத்திருந்து, ஆடிப்பெருக்கில் மணமக்கள் விடுகின்றபோது, காவிரி வழிபாட்டால், நீராட்டால் அவர்கள் மணங்கொண்ட உண்மையை உணரலாம். காவிரி இல்லற இணைப்பிற்குக் காரணமாகியதோடு நில்லாமல் பயிர்வளர்பிற்கும், இல்லற வாழ்வுக்கும் துணையாகும். காவிரி, துறவிற்கும் உறுதுணையாகி நிற்கக் காண்கிறோம். காமத்தை வெல்லக் கருதுவோர் மாலையில் இக்காவிரி ஆடின் காம உணர்வுகள் மடிதல் உண்மை என்பதனால் காமதாயினி எனும் பெயர் காவிரி பெற்றதில் வியப்பில்லை.
திருவாவடுதுறை மடமும், தருமபுர மடமும், திருப்பனந்தாள் மடமும், திருப்பராய்த்துறை மடமும், துறவியர் கூட்டம் பெருகி வளரத்துணை நிற்பதற்குக் காரணம் அவையாவும் காவிரிக் கரையில், ஆம் காம தாயினிக்கரையில் அமைந்ததாலன்றோ? குளித்தலைக்கு அருகே அண்மைக் காலத்து எழுந்த கிரிபித் அடிகளின் ஆசிரமும் காவிரிக்கரையில் அமைந்திருப்பது அன்றைய பண்பாடு, இன்றும் நின்று நிலவுதற்குச் சாட்சியாம்! கிறித்தவர்களின் புனித சின்னப்பரின் குருத்துவமடமும் காவிரிபுரக்கும் திருச்சியில் அமைந்திருப்பது பொருத்தமான சிந்தனையின் வெளிப்பாடாம்.
ஆற்றக்கரையிலேயே நாகரிகங்கள் தோன்றுகின்றன, வளர்கின்றன, மடிகின்றன, மாறுகின்றன. ஓர் ஆற்றங்கரை நாகரிகமும், பிறிதோர் ஆற்றங்கரை நாகரிகமும் ஒன்றுபடவும், வேறுபடவும் காண்கிறோம். நீர் உண்டமக்கள் உருவாக்கும் கலைகளும், சிறப்பாக நுண்கலைகளும் நுட்பமாய் வேறுபடுகின்றன. இதனை வள்ளுவர், 'நீரின்றி அமையாது உலாகளின் யார்யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு' எனக் குறிப்பிடுவார். கோதாவரியினைப் பாடவந்த கம்பர் அதனைச் சான்றோர் கவியொடும் ஒப்பிடும்பொழுது, இரண்டிற்கும் ஒப்புமையாய்த் 'தண்ணென்ற ஒழுக்கம் தழுவிச்சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்' என்பர். கங்கைநீரை உண்டு வாழ்ந்த வால்மீகி, சீதையை இராவணன் முடிபிடித்து இழுத்துத் தூக்கிச் சென்றதாய்க் காட்டுவார். கம்பனோ அதனைப் பண்பாட்டு வடிவமாக்கிப் பூமியொடும் பெயர்த்துத் தூக்கிச் சென்றதாய் மாற்றுவார். வாலியின் மனைவிதாரை தன் கணவனை இழந்தபின் சுக்ரீவனோடு வாழ்ந்ததாய் வால்மீகி வடிப்பார். காவிரிநீர் உண்ட கம்பனோ, வாலியை இழந்ததாரை, சினத்தொடு வந்த இலக்குவன் தாயரை நினைந்து நையக் காரணமான கைம்மைக் கோலத்தோடு வந்ததாய்க் காட்டுவார்.
webdunia photo
WD
கங்கைபுரந்த வால்மீகி எனும் தவமுனிவர்க்கு, இராமகாதை, வனத்திடையே கிடைத்த பலவின்கனி. காவிரி வெகுண்டபோது, 'கன்னிகரைகடக்கலாமோ' என அடக்கி, காவிரி நீரையே உதரத்திலேயும் உதிரத்திலேயும் கொண்டு வாழ்ந்திருந்த கம்பரோ, பிசின்போக்கி, முள் நீக்கிஈ மெல்லக்கீறிச் சுளையெடுத்துத் தேனும் வார்ந்து பார்க்கு உண்ணக் கொடுக்கிறார். சீதையை இதயமாம் சிறைவைத்த இராவணனை, 'பெண்ணெலாம் நீரேயாக்கிப் பேரெலாம் உமதேயாக்கிக் கண்ணெலாம் நும் கண்ணாக்கிக் காமவேள் எண்ணும் நாமத்து அண்ணல் எண்வானும் ஆக்கி ஐங்கணை கரியத்தக்கப் புண்ணெலாம் எமக்கே ஆக்கி விபரீதம் புணர்த்தவிட்டீர் எனப் பிதற்ற வைக்கும் போதும் கம்பரிடம் காவிரிப்பண்பாடே மிளிர்கிறது. பூவிழந்து, பொட்டிழந்து, வளைதுறந்து, முண்டிதத்தை வெள்ளாடை கொண்டு மூடி, இடக்கை ஒடுக்கி, வலக்கை வாய்பொத்தி, எதிர்ப்படுபவார்க்கு அஞ்சிச் செல்லும் காவிரிக்கரைவாழ் கைம்பெண் கோலமன்றோ தாரை கொண்டது! கொள்ள வைத்தவன் கம்பன் அன்றோ! அவன் காவிரிமகன் அன்றோ! ஆம்! கங்கையிற் புனிதமாய காவிரி!