Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிராமியக் கலை ஆய்விற்கும் உதவும் நேஷனல் போக்லோர் சப்போர்ட் சென்டர்

Advertiesment
கிராமியக் கலை ஆய்விற்கும் உதவும் நேஷனல் போக்லோர் சப்போர்ட் சென்டர்

Webdunia

மனிதர்களின் மகிழ்ச்சிக்கு முக்கிய காரணமாய் அமைந்திருப்பதில் குறிப்பிடத்தக்கது கலை. ஒரு நாட்டின் வரலாறு, பண்பாடு, வாழ்வியலை மற்ற நாட்டினரும் அறிந்து கொள்ளும் வகையில் அமைவது கலைவடிவங்கள்.

நம் நாட்டில் மேலை நாடுகளிலிருந்து பல்வேறு கலை வடிவங்கள் வேரூன்றும் இவ்வேளையில் நம் நாட்டின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கிராமியக்கலைகள் மேம்படும் நோக்கில் சென்னையில் செயல்பட்டு வரும் சிறந்த அமைப்பே நேஷனல் ஃபோக்லோர் சப்போர்ட் சென்டர் (National Folklore Support Center)

பல ஆண்டுகளாக கிராமியக்கலை முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்பட்டுவரும் இந்த அமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து இந்த அமைப்பின் இயக்குநர் எம்.டி. முத்து குமாரசாமி கூறியதாவது :-

நேஷனல் ஃபோக்லோர் சப்போர்ட் சென்டரின் மூலமாக இந்திய கிராமியக்கலைகள் கற்றுத்தரப்படுகின்றன. கிராமியக் கல்வி குறித்த ஆராய்ச்சிக்கல்வியும் அளிக்கப்படுகிறது. இது தொடர்பான பல்வேறு கருத்தரங்கங்கள், பயிலரங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகின்றன.

கிராமிய ஆராய்ச்சிகளில் ஈடுபட ஊக்கப்படுத்துவதுடன், ஆய்வில் ஈடுபடும் மாணவர்களுக்கு தகுந்த பயிற்சியும், கள ஆய்வு செய்வதற்கு துணை புரியவும் செய்கிறது. இந்தியன் ஃபோக்லைஃப் (Indian Folklife) என்ற இதழும் வெளியிடப்பட்டு தொடர்ந்து கிராமியக்கலை மற்றும் கிராம வாழ்வியல் முறை குறித்து உலகப்புகழ் பெற்ற கலைஞர்களால் கட்டுரைகள் எழுதப்பட்டு உலக நாடுகளில் உள்ள நாட்டுப்புறவியலில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் பயனடைய வழிவகை செய்யப்படுகிறது.

இந்த சென்டரின் மூலம் ஒவ்வொரு ஆண்டிலும் பத்துக்கும் மேற்பட்ட பயிலரங்கங்கள் மூலம் இந்தி கிராமியக் கலைகள் பயிற்சியளிக்கப்படுகிறது. இப்பயிலரங்கங்களில் சிறந்த கலைஞர்களைக்கொண்டு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அண்மையில் கூட ஐந்து நாள் சிறப்பு வில்லுப்பாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. 12 மாணவர்கள் மிகவும் பயனடைந்த இந்த வில்லுப்பாட்டு பயிற்சியை அளித்தவர் உலகப் புகழ் பெற்ற சமகால வில்லுப்பாட்டுக் கலைஞரான கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள்.

தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இதுபோன்ற கிராமியக்கலைகளை கற்பதில் ஆர்வமுடன் செயல்படுகின்றனர். இவ்வாறு கற்கப்படும் கலைகளின் வாயிலாக கிராமப்புறங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அவர்களுக்கு துணை புரிகிறது.

இங்கு வில்லுப்பாட்டு, கரகம் தொடங்கி மணிப்புரி கிராமிய நடனம் வரை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராமியக் கலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அவ்வப்போது பயிற்சி அளிக்கப்படுகிறது.
கிராமியக்கலை ஆய்விற்கும் உதவும் நேஷனல் ஃபோக்லோர் சப்போர்ட் சென்டர


இவை மட்டுமின்றி கிராமம் மற்றும் கிராமியக் கலைகள் குறித்த ஆய்வுகள் செய்பவர்களுக்கு மிகவும் உறுதுணை புரியும் விதமாக இந்திய கிராமியக் கலைகள் தொடர்புடைய அனைத்து புத்தகங்களையும் படித்து பயனடையும் வண்ணம் நூலகம் ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது இம்மையம். இவ்வறு அவர் கூறினார்.

இம்மையத்தின் செயல்பாடுகள் குறித்து கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற வில்லிசை வித்தகர் சுப்பு ஆறுமுகம் கூறுகையில், "நம் நாட்டில் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கிராமியக் கலைகள் அழிந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ள இந்த தருவாயில் இம்மையம் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள் ஆரோக்கியமளிக்கும் வகையில் உள்ளன. தற்போதைய இளைஞர்கள் கிராமியக் கலைகளில் சிறந்து விளங்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது என்றார்.

எத்னோகிராஃபி ஃபிலிம் மேக்கிங் :-

நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப கிராமியக் கலையையும் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது நேஷனல் ஃபோக்லோர் சப்போர்ட் சென்டர்.

இதன் அடிப்படையில் வரும் 2006-ன் தொடக்கத்தில் புதிதாக ஆறுமாத கோர்° ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. இதில் "எத்னோ கிராஃபி ஃபிலிம் மேக்கிங்" என்ற ஆறு மாத கால பட்டயப் படிப்பும் அடங்கும்.

இதன் மூலம் கிராமியக்கலைகள் உள்ளிட்ட நாட்டுப்புறவியலை அடிப்படையாகக் கொண்டு ஆவணப் படங்கள் எடுக்கும் முறையினை நவீன தொழில்நுட்பத்துடன் கற்று தர திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டுப்புறவியல் மற்றும் கிராமியக் கலைகளை அடுத்த சந்ததியினருக்கு பயன்படும் வகையில் தற்கால மின் ஊடகத்தில் பதிவு செய்வதற்கு ஏற்ப இந்த பட்டய படிப்பு துணை புரியும் வகையில் அமையும் என்கிறார் இம்மையத்தின் இயக்குநர்.

கம்ப்யூட்டர் யுகத்திலும் கலை வடிவங்களும் மாறி வருகின்ற நிலையில் நம் நாட்டில் பழமை வாய்ந்த கிராமியக் கலைகள் தொடர்ந்து நிலைத்து நிற்பதற்கு இயங்கி வரும் நேஷனல் ஃபோக்லோர் சப்போர்ட் சென்டர் மிகவும் பாராட்டுக்குரியதே.

Share this Story:

Follow Webdunia tamil